Skip to main content

“வேங்கைவயல் முதல் கள்ளச்சாராயம் வரை” - லிஸ்ட்போட்ட இ.பி.எஸ் 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Palaniswami Das Complaint With Governor Rn Ravi About Tamil Nadu Govt

 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்ன மலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “  திமுக அரசின் 2 ஆண்டுக்கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை ஆளுநர் பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ.வை அலுவலகத்தில் புகுந்து கொலை செய்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து சேலத்தில் ஒரு வி.ஏஓ.வை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆக இப்படி நேர்மையாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது. 

 

விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதையடுத்து தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து 20 பேருக்கும் மேல் உயிரிழந்த போதே இந்த அரசங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் தஞ்சையில் நேற்று இரண்டு உயிர்கள் பலியாயிருக்காது. ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம், இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இருவரும் பாரில் மது குடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மாவட்ட நிர்வாகம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அரசு அதிகாரிகளை வைத்து அரசு இது போன்று முயற்சி செய்கிறது. வேங்கை வயல் சம்பவத்தில் கூட இன்னும் முழு நடவடிக்கை இல்லை. இப்படித் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு காவல்துறையைப் பார்த்து பயம் கிடையாது. எதாவது நடவடிக்கை எடுத்தால்தானே பயம் இருக்கும். 

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று டிஜிபியும், சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று முதல்வரும் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் 2020 ஆம் ஆண்டில் 31 பாலியல் வன்கொடுமையும், 2021 ஆம் ஆண்டு  32 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த தகவல் எல்லாம் அவர்கள் அளித்த மானிய கோரிக்கை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சிறப்பான நடவடிக்கைகளால் கடந்த 13 வருடங்களாகக் கள்ளச்சாராய இறப்பு மாநிலத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்களது ஆட்சியில் எந்த உயிரிழப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனால் திமுக அமைச்சர் வேண்டுமென்றே எங்கள் ஆட்சியின் மீது குறைசொல்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘2026 தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு’- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
DMK chief M.K.Stal's announcement Formation of coordination committee to face 2026 elections

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக கவுன்சிலர்; எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS action on AIADMK councilor involved in Armstrong incident case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.