Skip to main content

சென்னை வருகிறார் ப.சிதம்பரம்... வரவேற்க வருமாறு கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

 

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற ப. சிதம்பரத்திற்கு அளிக்கிற வரவேற்பு காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையமே திணறியது என்கிற செய்தி வருகிற வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியோடு அணி திரண்டு வர வேண்டுமென கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கு காரணமாக, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் ஜாமீனில் விடுதலை பெற்றிருக்கிறார். நிதியமைச்சராக இருந்த போது, மே 2007 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில்கூட அவருடைய பெயர் இல்லை. அவர் மீதுள்ள குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் திரட்டப்படவில்லை. 

 

P. Chidambaram


 

ஐ.என்.எக்ஸ். ஊடக நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு வழங்குவதற்கு பொருளாதார விவகார செயலாளர் தலைமையில் 6 செயலாளர்கள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதில், சாதாரண அலுவல் நடைமுறையின் கீழ் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் 13-வது கையொப்பமிட்டவர் திரு. ப. சிதம்பரம். தமக்கு முன்பாக கையொப்பமிட்டு முடிவெடுத்த 12 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 13-வது கையொப்பமிட்ட திரு. ப. சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது ஏன் ?  இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையின் மூலம் திரு. ப. சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான அடக்குமுறை பா.ஜ.க. அரசால் ஏவிவிடப்பட்டது.
 

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிற மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் பொய் வழக்கு போட்டு திரு. ப. சிதம்பரத்தின் ஜனநாயக செயல்பாடுகளை முடக்கி விடலாம் என பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஒரே வழக்கிற்கு இரண்டு விதமான விசாரணை அமைப்புகள். ஒன்றில் விடுதலைக் கிடைக்கிற நிலையில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதைவிட பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கிற்கு வேறு சான்று தேவையில்லை.


 

திரு. ப. சிதம்பரம் அவர்கள் சிறையில் இருந்த 106 நாட்களில், 45 நாட்கள் எந்த விசாரணையையும் அவரிடம் எந்த அமைப்புகளும் நடத்தவில்லை. ஆனால், ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிற போது அவரை விடுதலை செய்யக் கூடாது, இன்னும் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு, காவல் நீட்டிப்பு கேட்பது தொடர்கதையாக நடந்து வந்தது. இத்தனை நாட்கள் சிறையில் இருந்த போது எத்தகைய ஆதாரங்கள் திரட்டப்பட்டது ? ஏதாவது ஆவணங்கள் கிடைத்ததா ? ஏதாவது வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்ததா ? திரு. ப. சிதம்பரத்திற்கு எதிராக மத்திய புலனாய்வுத்துறையும், அமலாக்கத்துறையும் 106 நாட்கள் விசாரணையில் என்ன ஆதாரங்கள் திரட்டப்பட்டது என்பதற்கு நாட்டு மக்களிடம் விளக்கம் கூற வேண்டிய பொறுப்பு விசாரணை அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. 
 

மத்திய பா.ஜ.க. அரசின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து 106 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையாகி, வருகிற 7.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு திரு. ப. சிதம்பரம் அவர்கள் வருகை புரிய இருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள அவர் மிகுந்த மனவலிமையையும், துணிவையும் பெற்றிருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த காலங்களில் பா.ஜ.க. அரசை எதிர்த்து எத்தகைய ஏவுகணைகளை தொடுத்தாரோ, அதைவிட மிக வலிமையான முறையில் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அரசியல் பேராண்மையோடு விமர்சனங்களை மேற்கொள்வார் என நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவர் மீது இருந்த நம்பகத்தன்மை இன்று பல மடங்கு கூடியிருக்கிறது. நாம் கொடுக்கிற மாபெரும் வரவேற்பு திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிற வகையில் அமைய வேண்டும். 
 

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு    அளிக்கிற வரவேற்பு காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையமே திணறியது என்கிற செய்தி வருகிற வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியோடு அணி திரண்டு வர வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


 

சென்னை விமான நிலைய வரவேற்பிற்குப் பிறகு, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மாலை 4 மணியளவில் இன்றைய  அரசியல் சூழல் குறித்து திரு. ப. சிதம்பரம் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார். இவர் ஆற்ற இருக்கின்ற உரையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவரது சங்கநாதத்தைக் கேட்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கூட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
 

மறுநாள் 8.12.2019 அன்று திரு. ப. சிதம்பரம் அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்து, அங்கிருந்து தமது சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கேயும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.