Skip to main content

திஹார் சிறையில் சிதம்பரம்?  பரபரக்கும் டெல்லி!  

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

டெல்லி திஹார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் கைது செய்யப்படும் வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். 


 ’’அந்த வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது சிறை நிர்வாகம். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம், அந்த அறைக்கு கொண்டு வரப்படலாம் ‘’ என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். 

 

p. chidambaram



மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதித்திருக்கும் அந்நிய முதலீடு தொகையை விட கூடுதலாக பல கோடிகளை (305 கோடி) பெற்றது ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவனம். சட்டவிரோதமாக அந்நிறுவனம் பெறப்பட்ட அந்த முதலீட்டு தொகைக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதித்தாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது சி.பி.ஐ.! அந்த கஸ்டடி 26-ந்தேதி  (திங்கள்கிழமை) முடிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் திஹார் சிறைக்கு அனுப்பப்படலாம் என்கிற பரபரப்பு டெல்லியில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 


 

இது குறித்து விசாரித்தபோது, ‘’ கஸ்டடி முடிந்ததும் சி.பி.ஐ.கோர்ட்டில் திங்கள்கிழமை சிதம்பரம் ஆஜர்ப்படுத்தப்படுவார். அப்போது, மேலும் சில நாட்கள் அவரை கஸ்டடி எடுக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம். அப்படி கோரிக்கை வைக்கப்படாத சூழலில், சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை ஜாமின் மறுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்ற காவலுக்கு சிதம்பரம் அனுப்பி வைக்கப்படுவார். அப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்படுவார் சிதம்பரம்.  அதேசமயம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமின் கேட்ட சிதம்பரத்திற்கு 26-ந்தேதி (திங்கள்கிழமை) வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு அதே தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். 


 

இந்த விசாரணை திங்கட்கிழமை வரும் போது, அமலாக்கத்துறையின் வாதங்களை உடைத்து முன் ஜாமின் பெற சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சிப்பார்கள். அப்போது சிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்கும்பட்சத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டால் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்து தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முயற்சிக்கும். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இல்லாமலும், ஜாமின் கிடைக்காமலும் போகும்பட்சத்தில் திகாருக்கு சிதம்பரம் அனுப்பப்படுவார் ‘’ என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

 

சார்ந்த செய்திகள்