Skip to main content

'ஓபிஎஸ்ஸா இபிஎஸ்ஸா' - தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 'OPS or EPS'- Election Commission to advise tomorrow

 

பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுகவின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, கர்நாடகத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில் கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே, இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இ.பி.எஸ் தரப்பு, ஏற்கனவே பல முறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால், முடிவெடுக்கவில்லை. மேலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக் கூடாது. தங்களது தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில், அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் 10 நாட்களில் அதிமுக சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் எனவும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

 

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தனது அடுத்தகட்ட முடிவு என்ன என்பதை நாளை நடக்கவிருக்கும் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யும். இரண்டு தரப்பு ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படலாம் அல்லது இரண்டு தரப்புகளை நேரில் அழைத்து விளக்கங்களைக் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும்பினால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள நிவாரணத்தொகைக்கு டோக்கன்; அமைச்சர் உதயநிதி தகவல்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Minister Udhayanidhi information about providing token for flood relief fund

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில்,“மத்திய அரசு ஒதுக்கியுள்ள 450 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது. பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 6 ஆயிரம் ரூபாய் போதாது என விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தங்கள் நண்பர்களிடம் வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். .

Next Story

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
ADMK Executive Committee, General Committee meeting date announcement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii) படி, வருகின்ற செவ்வாய் கிழமை (26.12.2023) காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.