
“2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநரிடம் தெளிவாக சில விஷயங்களை சொல்லி இருந்தோம். 2021-2022, 2022-2023 இந்த இரண்டு வருடங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மது விற்பனை 22% உயர்ந்துள்ளது. போன வருடம் 36 ஆயிரம் கோடி இந்த வருடம் 44 ஆயிரம் கோடி. இந்தியாவில் எங்கும் 22% உயரவில்லை. கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதும் உயர்ந்துள்ளது.
கர்நாடகத் தேர்தலை பொறுத்தவரை மக்களின் மனநிலை ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுகிறது. 1985க்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு சலிப்புத் தன்மை வருகிறது. 38 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆளும் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. இம்முறை எங்கள் ஆசை அதை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் இம்முறை அது நடக்கவில்லை. இன்னொன்று காங்கிரஸ் அறிவித்த இலவச திட்டங்கள். 5 இலவச திட்டங்களை அறிவித்தார்கள். நேற்று சித்தராமையா அந்த இலவசத்தில் 3 மாற்றங்களை கொண்டு வந்தார். ஏழைகளிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. புழக்கத்தில் இல்லை. அதை வைத்திருப்பவர்கள் பதுக்கி வைத்துள்ளார்கள். லஞ்சம் வாங்கியவர்கள்.
எனக்கு 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட கட்சியில் திறமையான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எனது பணி. கட்சியின் தலைவராக நான் டெல்லிக்கும் தெரிவித்துள்ளேன். 2024 தேர்தலில் தொண்டனாக பணி செய்ய விரும்புகிறேன். தமிழகத்தை விட்டு வெளியே செல்ல மனது இல்லை. இந்த மண்ணில் அரசியல் செய்ய விருப்பப்படுகிறேன். டெல்லிக்கு செல்ல விருப்பம் இல்லை” எனக் கூறினார்.