Skip to main content

புதிய கல்விக் கொள்கை ஆபத்தானது! -அன்புமனி ராமதாஸ் எச்சரிக்கை! 

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

Anbumani Ramadoss

 

8-ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை தேவையற்றவை: புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் வரவேற்கக் கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித் திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக் கல்வியைப் பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கொள்கை ஆபத்தானது.

 

மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில்  கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் மூலம் 8-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது அதைவிட மோசமாக 3, 5, 8 ஆகிய 3 வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடுத்த மூன்றாவது ஆண்டிலேயே பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உருவாகி விடும். இந்தியாவின் ஊரக மக்கள், தங்களின் பிள்ளைகளைச் சில கட்டாயங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் ஏதேனும் வகுப்பில் தோல்வியடைந்தால், உடனடியாக படிப்பை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 3-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது ஊரக மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதாகவே அமையும்.

 

5 மற்றும் 8ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும். கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும். மத்திய அரசு பள்ளிகளில் முதல் இரு வகுப்புகளுக்கு தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. அத்தகைய சூழலில் குழந்தைகள் எழுதும் முதல் தேர்வு என்பதே பொதுத்தேர்வு என்பது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். 8-ஆம் வகுப்பு வரை எந்த வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.  

 

மாணவர்கள் புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும். பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் திறமையை மட்டும் மதிப்பிடாமல், புலமையும் சேர்த்து மதிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகள் தேர்வு மற்றும் அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால், புலமை எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது தெரியவில்லை. இது முறைகேடுகளுக்குத் தான் வழிவகுக்கும்.

 

கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறைக்கு 15 ஆண்டுகளில் முடிவு கட்டப்படும் என்றும், அனைத்துக் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படுவது தான் சரியானதாக  இருக்கும். தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளித்தால் விதிமீறல்களும், முறைகேடுகளும் அதிகரிக்கும்.

 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தைக் கண்டிப்பாகக் கைவிட வேண்டும்.

 

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி வெளியிடப்பட்டு கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கோரப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான புதிய திட்டங்களை ஆலோசனையாக வழங்கியது. அவை ஏற்கப்பட்டிருந்தால் மாணவர்கள் நலனைப் பாதிக்கும் மேற்கண்ட திட்டங்கள் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டு  இருக்காது. ஆனால், மக்களின் யோசனைகள் சேர்க்கப்படாததில் இருந்தே கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

 

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் அதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது படிப்படியாக பள்ளிக்கல்வி முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நடுநிலை வகுப்புகளிலேயே தொழிற்கல்வி அறிமுகம் செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கதே.

 

பள்ளிக்கல்வியை 11 ஆண்டுகளாகக் குறைந்து, பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக அதிகரிப்பது, பட்டப் படிப்பிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற அனுமதிப்பது, எம்.ஃபில் படிப்பு கைவிடப்படுவது ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவையாகும். உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு  விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்; அதேநேரத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணத்தை உயர்த்த புதிய கட்டண நிர்ணய ஆணையம் வழி செய்து விடக்கூடாது.

 

கல்விக்காக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியின் அளவை இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும். இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன. எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்வியைக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, 1964-ஆம் ஆண்டின் கோத்தாரி ஆணைய அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களை புதிய கொள்கையில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.