தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஓ.பி.எஸ். முதல்வராகி, இ.பி.எஸ். முதல்வராகி, சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைச் சென்று, டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி துவங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இ.பி.எஸ். முதல்வரானதும் கட்சியின் தலைமை பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பிரித்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி இழக்க, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் வலுவாக ஒலிக்கத் துவங்கி இ.பி.எஸ். இறுதியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தார். சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவானார். ஆனால், தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க ஓ.பி.எஸ். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டை முடித்த சூட்டோடு மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 7) தஞ்சையில், முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் மகனின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் அதை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தார். ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்களிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழலில் இத்தகைய மாபெரும் இயக்கத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒன்றாகக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றுள்ள அரசியல் சூழலில், அதிமுக கழக சட்ட விதிகளுக்கு ஊறு வந்துள்ள இந்த சூழலில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என்று முயற்சி செய்து வரும் சூழலில் நாம் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் நம் அனைவரது எண்ணமும் ஒற்றுமையோடு ஒருசேர இந்த இயக்கத்தை வழி நடத்திட வேண்டும் என்றுதான் அனைவரும் ஏங்கிக் கொண்டுள்ளனர்.
நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நீங்கள் ஒருங்கிணைய வேண்டுமென்று தான் சொல்கிறார்கள். அதன் அர்த்தம் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும் என்று தான் அர்த்தம். திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி சார். இது உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாக உள்ளது. இதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அரசியல் களத்தில் விளையாடும் போது நம்மை எதிர்த்து நின்று விளையாடும் தகுதி தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே யாருக்கும் இல்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.