Skip to main content

நாகை, மயிலாடுதுறை எம்.பி.க்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எம்.எல்.ஏ.

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
nagapattinam mayiladuthurai  mps

 

 

கரோனா வைரஸின் கோர முகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் துவங்கி கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இரண்டு எம்.பி.க்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

"அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உருவாக காரணம் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டதுதான்" என்கிறார்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும். மேலும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கும் கரோனா தொற்று இருக்குமோ என்கிற சந்தேகத்தில் உள்ளனர்.

 

இதுகுறித்து விசாரித்தோம், "கடந்த 30 ஆம் தேதி காலை மயிலாடுதுறை புதிய மாவட்ட உருவாக்கம் குறித்து மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. அன்று மாலையே மயிலாடுதுறையிலும் கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளும், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு, மாவட்ட பிரிவினையை சம்பந்தமான தங்கள் கருத்துகளை கூறினர்.

 

இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜீம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கமும் இரண்டு இடங்களிலும் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருவருமே இரண்டு மேடைகளிலும் அருகருகே அமர்ந்திருந்திருந்தனர்.

 

இந்தநிலையில் ஒன்றாம் தேதி மாலை செல்வராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் கூறினர். அதனால் நாகையில் தனிமையில் தங்கியிருந்தார். ஆனால் நேற்று இரண்டாம் தேதி அவருக்கு மேலும் உடல் நிலை அதிகமாக சோர்வடைய, கரோனா பரிசோதனை முடிவிலும் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதன் பிறகு அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில்தான் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ,ராமலிங்கத்திற்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிறகு அங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

 

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு இரண்டு கூட்டத்திலும் கலந்துகொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. மயிலாடுதுறையில் நடைபெற்ற அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு விழாவில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.