மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.
அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.
இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.