Skip to main content

“வரம் கொடுத்த சசிகலா தலையில் கை வைத்தவர்தான் எடப்பாடி” - முதல்வர் பழனிசாமியை சாடிய தயாநிதிமாறன்

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

MP Dhayanithi maran speech about Edappadi palanisamy

 

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற நிகழ்சியின் மூலமாக மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

 

அக்கூட்டத்தில் பேசிய அவர், “வரம் கொடுத்தவர் தலையில் கை வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர், தமிழ்நாட்டு  மக்களுக்கும் துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது எனக் கூறி நான்கு வருடம் ஆகிவிட்டது. தெருவிற்குத் தெரு ஜெயலலிதா படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிற எடப்பாடி பழனிசாமி, ஏன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால் கலக்சன், கரப்ஷன், கமிஷன் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

 

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87 அதில் தமிழகத்திற்கு ரூ.30 வரி கட்ட வேண்டும். கேஸ் விலை ரூ.760 அதில வரி, சாந்து பொட்டு, செருப்பு, மாஸ்க்  உள்ளிட்ட அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி. நீங்க எதையாவது கொண்டுவாங்க. ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தளவு விவசாயி அதிகமாக சம்பாதிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு குறைவாக கொடுக்கக் கூடாது. விவசாயி நஷ்டத்தில போகக்கூடாது. கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றவில்லை ஏனென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி போய்விடுமோ என பயம். 

 

ஸ்டாலின் மட்டுமே விவசாயிகளைக் காப்பார். மோடி கொண்டு வந்த சட்டத்திற்கு எடப்படி பழனிசாமிதான் ஆதரவு கொடுத்தார். இப்படியே தொடர்ந்து நமது உரிமையை பறிக்கொடுத்தால், நீங்க  குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என பெரியார், அண்ணா போராடிய மண் இது. அ.தி.மு.க.வினருக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கத்தான் தெரியும். இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். நான் இந்த மண்ணுக்காரன்; எங்க அம்மா கும்பகோணம், எங்க அப்பா திருவாரூர், எங்க தாத்தா பிறந்ததும் திருவாரூர் என இந்த மண்ணுக்குச் சொந்தகாரன். உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.