publive-image

நட்பின் இலக்கணத்தை கற்றுக் கொடுத்தவர் மோடி என எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அடுத்த நாள் (பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக அதானி விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சூடுபிடிக்க வைத்தது.

Advertisment

அதானியும் மோடியும் நண்பர்கள் எனக் கூறி எதிர்க்கட்சிகள் அவையின் மையப் பகுதியில் கூடி முழக்கமிட்டன. அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அப்போது பேசிய பிரதமர் மோடி ''நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர். சிலர் பேசியதை கூர்ந்து கேட்டபோது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரிய வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது'' எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பேசிய பிரதமர் மோடி, ''எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதிலும் தாமரை மலரும்'' எனப் பதிலளித்தார். அப்பொழுது பாஜக எம்எல்ஏக்கள் சிரித்தபடி மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் பதிலளித்தது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி ஆகியோரைப் பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிப் பேசினார் பிரதமர். எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி. ஆனால் அதற்கு வாய் திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக் கொடுத்தார் பிரதமர்” எனக் கூறியுள்ளார்.