Skip to main content

“பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

M.K.Stalin commented on the public meeting held on behalf of DMK and its alliance party

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் இன்று விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் கோவையில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பொதுக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில், “அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.

 

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்க கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்