Skip to main content

"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

mk stalin statement on why indian students went to ukraine to study medicine

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் கடந்த சில நாட்களாக அறிவுறுத்தி வருகிறது. அதேபோல இன்று இன்றிய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நடந்தாவது நாட்டைவிட்டு வெளியேறுங்கள் எனக் கூறியிருந்தது. ரஷ்யாவின் தாக்குதலில் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த மருத்துவமானவர் நவீன் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்களின் உயிர்களை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.  

 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.

 

உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள் - ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள் - ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தப் போக்கினை உடனடியாகக் கைவிட்டு, உக்ரைன் - ரஷ்யப் போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி, நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய தன் கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும்.

 

இது “பரப்புரை” செய்வதற்கோ, "விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ” உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன்.

 

அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல்- வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று- சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்குப் போட்டியான பேட்டிகளையும், கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும் - பா.ஜ.க.விற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கியக் கடமையாகும்.

 

நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை எளியவர்களுக்கு நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி அவர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி - இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு - இதற்கான ஆதரவை கோரி மாநில முதலமைச்சர்களுக்கும் "நீட் தேர்வு பாதிப்பு” தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவு கோரினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள "நீட் விலக்கு" மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவர்களின் அவல நிலைமை - துயர் நிலைமை மீண்டும் உணர்த்துகிறது.

 

நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் - தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

“உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைன் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும் - உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் “நீட் தேர்வினை" ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.