Skip to main content

என்ன செய்யப் போகிறார் முதல்வர் எடப்பாடி? அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம்! மு.க.ஸ்டாலின்

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

eps-mks


கரோனா கடன் வாங்குவதற்காக, 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத் திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை அ.தி.மு.க. அரசு, எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது. மத்திய பா.ஜ.க. ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல்; விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற தமிழக விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட அ.தி.மு.க. அரசு நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்!" என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவிலேயே முதன்முறையாக, “அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்” வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முன்னோடித் திட்டத்தை, கரோனா பேரிடரை - நல்ல சமயம் இது; நழுவ விடக்கூடாது என்றெண்ணி - அதைத் தவறாகப் பயன்படுத்தி, ரத்து செய்ய அ.தி.மு.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

1989 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு - 1990 முதல், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இந்த இலவச மின்சாரத் திட்டம் விவசாயிகளுக்கு ஒப்பற்ற திட்டமாக இன்றளவும் இருந்து வருகிறது.
 

“சிறப்புப் பொருளாதார உதவித் திட்டம்” என்று அறிவித்து, “தனியார்மயத்திற்கு” சிவப்புக் கம்பளத்தை அனைத்துத் துறைகளிலும் விரிக்க முயன்றிருக்கும் மத்திய அரசு, “எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்” என்ற வஞ்சக நோக்குடன், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை, தங்களுடைய “அஜெண்டா”வுக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது. “கரோனா பேரிடரை முன்னிட்டு மாநில அரசுகள் அதிககடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று அனுமதி அளித்த கையோடு - “அந்தக் கடனைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று நிபந்தனை விதிப்பது மத்திய - மாநில உறவுகளுக்கு கிஞ்சித்தும் பொருத்தமானது அல்ல!
 

ஏற்கனவே, “தாங்க முடியாத கடன்”, “விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவிப்பு”, “வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை” எனப் பல துயரங்களையும், இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற - கருணையற்ற “பேரிடர் தாக்குதல்” இது!
 

கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையைச் சீர்செய்ய அனுமதி கேட்கும் மாநிலங்களிடம், “நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் மின்சார மானியத்தை ரத்து செய்யுங்கள். அதுவும் 2020 டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது செயல்படுத்திக் காட்டுங்கள்” என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நிபந்தனை விதிப்பது, மத்திய அரசின் மனதிற்குள் அரவம் போல் புகுந்திருக்கும் “கந்துவட்டி மனப்பான்மையை”க் காட்டுகிறது.
 

அதைவிட, “கூட்டாட்சித் தத்துவம் கிலோ என்ன விலை” என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்தில் - பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், அதிகார ஆட்டம் போடுகிறது மத்திய பா.ஜ.க. அரசு என்பதை வெளிப்படுத்துகிறது.
 

“மாநிலங்கள் மத்திய அரசின் அடிமைகளாக இருக்க வேண்டும்” என்று, மக்களின் துயரமான காலகட்டத்திலும் மத்திய அரசு நினைப்பது, இந்தியத் திருநாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கே விடப்பட்டிருக்கும் சவாலாகவே இருக்கிறது.
 


கட்சி சார்பற்ற முறையில் அனைத்து மாநிலக் கட்சிகளும் - எதிர்த்து ஒருங்கிணைந்து போராடிட வேண்டிய ஒரு சூழ்நிலையை மத்திய பா.ஜ.க. அரசே திட்டமிட்டுத் திணித்து வருகிறது என்றே தோன்றுகிறது.
 

“இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும்” நோக்கில், "2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக்" கொண்டு வந்து - ஊரடங்கு நேரத்திலும் அதன்மீது மாநிலங்களிடம் கருத்துக் கேட்டிருக்கும் மத்திய அரசு - அச்சட்டத்தை நிறைவேற்றும் முன்பே, மின்சார மானியங்களைப் பறித்துக் கொள்ளும் குறுக்குவழிகளைக் கடைப்பிடிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
 

வெள்ளைக்காரத் துரைத்தனத்தை நினைவு படுத்தும் இந்தக் கெடுபிடியான உத்தரவு,  விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மட்டுமின்றி, நெசவாளர்கள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் உள்ளிட்ட இலவச மின்சாரத்தை அனுபவித்து வரும் பல தரப்பட்ட நுகர்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது. ஆகவே, இந்த “மானியம் ரத்து செய்யும் நிபந்தனையை” மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 

கரோனாவினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க, கடன் வாங்க நினைக்கும் அ.தி.மு.க. அரசு முதலில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த “தற்போதைக்கு அவசரமில்லாத திட்டங்களை”யும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு - ஊரடங்கு காலத்திலும்  விடப்படும் “நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு டெண்டர்” போன்றவற்றையும் தள்ளிவைக்க வேண்டும். கடன் வாங்குகிறோம் என்ற பெயரில், தமிழ்நாட்டில் 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு, எந்தச் சூழ்நிலையிலும், எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொள்ளக் கூடாது.
 

மாநில அரசுகளுக்கு “கரோனா கடன்” வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி ஏதோ ஒப்புக்காகக் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, நிறுத்திக் கொள்ளாமல் - அதற்குரிய அழுத்தமும் கொடுத்து,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

http://onelink.to/nknapp

 

மத்திய பா.ஜ.க. ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல்; அவர்களுடைய பேராதிக்கப் போக்கை எதிர்த்து, “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை" என்று முழங்க வேண்டும்; விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற தமிழக விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிட நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்!
 

 

என்ன செய்யப் போகிறார் முதல்வர் எடப்பாடி என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.