
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு தவகல் தொழினுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (17-02-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேசிய அளவில், கல்வி எங்கு சிறந்து கிடைக்கிறது?, எத்தனை சதவீதம் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை விட பத்து மடங்கு மாநிலங்களுக்கு, நாங்கள் சொல்லும் கொள்கையை தான் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அதிர்ச்சி உருவாக்கும் செய்தியாக இருக்கிறது. பேரறிஞர் அண்ணா கூறியபடி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இரண்டு மொழி கொள்கையை செயல்படுத்தி இன்றைக்கு உலகளவில் பெரிய இடத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு மொழி கொள்கையில் குறை மட்டும் இல்லை என்பதை தாண்டி நிறை இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
இதையெல்லாம் தாண்டி, மாநில அரசுகளுக்கு சில உரிமை இருக்கிறது, ஒன்றிய அரசுக்கு சில உரிமை இருக்கிறது. ஆனால், சட்டத்தில் கூட இடம்பெறாத இந்த கொள்கையை கொண்டு வந்து, இதை நீங்கள் அமல்படுத்தவில்லை என்றால் ஜனநாயகப்படி வரவேண்டிய நிதியை கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் இது கொடூரமான சர்வாதிகாரி செய்கின்ற வேலை. எனவே, என்னை பொறுத்தவரைக்கும் மத்திய அமைச்சர் இதை வெளிப்படையாக சொன்னது நல்ல நிகழ்வாக நான் கருதுகிறேன். உங்கள் விருப்பத்தை மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்வீர்கள் என்று அவரே தனது வாயிலேயே நிரூபித்தது நல்ல நிகழ்வு தான்” என்று கூறினார்.