
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்பட்டதை கண்டித்து ‘வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு, உரிமையை கேட்போம் துணிவோடு’ என்ற தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொதுச்செயலாளரும், அமைச்சரமான துரைமுருகன் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “ஈரோட்டில் தி.மு.க பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. எங்கள் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள்” என்று கூறினார். டெல்லியில் பா.ஜ.க வெற்றி பெற்றது குறித்து கேட்டதற்கு, “வெதர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறும். ஆகையால் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கு அங்கு அரசு நடக்கிறது” என்று பதிலளித்தார். எல்லா இடங்களிலும் தாமரை மலர்கிறது என மோடி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, “எல்லா ஊரிலும் மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது, அந்தக் கூட்டத்தாலும் முடியாது” என்று தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது குறித்து கேட்டதற்கு, “டெபாசிட் போது வருது என அதை பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் அவர்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றம்” என்று கூறினார். தொடர்ச்சியாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சிக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, “இதே மாதிரி சும்மா இருந்து விடவும் முடியாது, இது மாதிரி அவர்களும் இருந்து விட முடியாது. இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டிய நிலை உருவாகும்” எனப் பதிலளித்தார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றது தற்போது டெல்லியிலும் தோற்றுள்ளது. இதற்கு உங்கள் தரப்பில் இருந்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டதற்கு, “அதையெல்லாம் உங்களிடமா சொல்ல முடியும். அதற்கு என செயற்குழு பொதுக்குழு கூட்டி நாங்கள் முடிவு செய்வோம்” எனக் கூறினார்.
முன்னதாக கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “மத்திய அரசு ஒரு ரூபாயை கூட தமிழகத்து கொடுக்கவில்லை, எல்லாத்தையும் முடக்கிவிட்டார்கள். காரணம் நாம் செய்யும் வேலைக்கு பட்ஜெட்டில் பணம் இல்லை என்கிறார்கள். இந்தியை படிங்கடா என்றால் போராட்டம் பண்ணுகிறீர்கள், கோயிலை கட்டுங்கடா என்றால் பள்ளிக்கூடமா கட்டுகிறீர்கள் ஆகையால் பணம் இல்லை என மத்திய அரசு சின்ன சின்ன விஷயத்திற்காக எல்லாம் காரணத்தைக் காட்டி தமிழகத்தை வஞ்சிக்கிறது. இந்த வருடம் அதிகமான பணம் பாட்னா விற்கும், சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்ல எங்கள் பணத்தை கூட கொடுக்க மறுக்கிறார்கள். பிறக்கும் பிள்ளைக்கு தான் பெயர் வைப்பார்கள், ஆனால் நமது ஊரில் வரும் புயலுக்கு எல்லாம் பெயர் வைக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வேண்டும் என கேட்டோம் ஆனால் கொடுக்கவில்லை. நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்கிறோம், நானே கடைக்காரனாக இருக்கிறேன் என்கிறார்கள்.
ஆனால் அம்பானி, அதானி 25 லட்சம் கோடி கொடுக்கனும் அதனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். உங்கள் மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம், எல்லோரும் நல்லா இருக்கிறார்கள் முன்னேறிய மாநிலம் அதனால் பணம் இல்லை என்கிறார்கள். பீகார் படிக்காத மாநிலம் அதற்கு அதிக நிதி என்கிறார்கள். இப்படி கேவலமான நிலையை மத்திய அரசால் அளிக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு கொடுக்கலையா அதை எல்லாம் விரைவில் கொடுத்து விடுகிறோம். கூட்டம் நடக்கும் இந்த ஊருக்கு அணைகட்டு, அணைகட்டு என பேரை மட்டும் ‘அணைக்கட்டு’ என வைத்துள்ளார்கள் ஆனால் அணையே இல்லை. விரைவில் அணை கட்டப்படும். பாலாற்றில் தண்ணீர் வந்தால் வட ஆற்காடு முழுவதுமே காஞ்சிபுரம் வரை பயன் பெறுவார்கள். நிரந்தரமாக பாலாற்றில் தண்ணீர் வருவதற்கு ஒரு பணியை நான் செய்யலாம் என இருக்கிறேன் அதை தலைவரிடம் பேசி வருகிறேன். பாலாற்றில் நிரந்தரமாக தண்ணீர் வந்தால் நமது ஜில்லாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை” என பேசி முடித்தார்.