தமிழக கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.கஎம்.எல்.ஏசக்ரபாணி மகனுக்கு கல்குவாரி குத்தகை ஒதுக்கீடு செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்த ஒதுக்கீட்டைசெய்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அறிக்கை வெளியிடுள்ள மு.க.ஸ்டாலின், “வானூர் தொகுதி அ.தி.மு.கசட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணியின் மகனுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் குவாரி குத்தகை அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரியைக் குத்தகைக்கு அளித்துள்ளது, அண்மையில் அந்தக் குவாரியில் நடைபெற்ற விபத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
கடந்த 03.11.2020 அன்று எம்.எல்.ஏ, சக்ரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் உள்ள கல்குவாரியில் கோரவிபத்து நடைபெற்றுள்ளது. அதில் ஆறுமுகம், ரங்கராவு ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக ஆறுமுகத்தின் மகன் அன்பழகன் கொடுத்த புகாரினைப் பெற்றுக் கொண்ட வானூர் காவல் நிலையத்தினர், “திருவக்கரை சக்ரபாணி மகன் பிரபு கல்குவாரியில்” என்று, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுடைய குவாரி என்பதை மறைத்துப் பதிவு செய்துள்ளார்கள். அ.தி.மு.கசட்டமன்ற உறுப்பினரின் மிரட்டல் காரணமாகவே இப்படி “திருவக்கரை பிரபு” என்று முதல் தகவல் அறிக்கை (ஃஎப்.ஐ.ஆர்) போட்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.கஆட்சியில் ஊழல் துர்நாற்றம் எங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி தனது சம்பந்திக்கும் - சம்பந்தியின் உறவினருக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை - அதுவும் 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஒப்பந்தங்களைக் கொடுத்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - அவரது சகோதரருக்கும், சகோதரரின் உறவினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேலான உள்ளாட்சித்துறையின் ஒப்பந்தங்களைக் கொடுத்து வருகிறார். சட்ட அமைச்சரும் - கனிம வளத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம்.
தனது ஊழல் போக, அ.தி.மு.கசட்டமன்ற உறுப்பினரின் மகனுக்குக் கல்குவாரி உரிமம் கொடுத்துள்ளார். பொது ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் காண்டிராக்டுகள் மற்றும் குத்தகைகளைப் பெறக் கூடாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் விதி. ஆனால் அ.தி.மு.கசட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கே கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சக்ரபாணி, தனது மகனுக்கே அரசு கல்குவாரியைக் குத்தகைக்குப் பெற்றிருப்பதால் எம்.எல்.ஏபதவியிலிருந்து தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.
அரசின் டெண்டர்கள், காண்டிராக்டுகள், குத்தகைகள் எல்லாம் அ.தி.மு.கஅமைச்சர்களும், முதலமைச்சரும் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் அளித்து- ஊழல் ஆட்சியை- எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு காட்டாட்சியை முதலமைச்சர் திரு. பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர் கொடுப்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என்பது தெரிந்தும் கூட - தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு முதலமைச்சரும், அ.தி.மு.கஅமைச்சர்களும் அரசு கஜானாவைக் கொள்ளையடித்து வருவது ஆபத்தானதும், அவமானகரமானதும் ஆகும்.
ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டர் தொடர்பாக- உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர். ஏ.செல்லக்குமார் வழக்குத் தாக்கல் செய்து - அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியை அ.தி.மு.கஎம்.எல்.ஏ.விற்கு தாரை வார்த்திருப்பது விதிகளுக்கு எதிரானது, வெட்கக் கேடானது.
அ.தி.மு.கஎம்.எல்.ஏசக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் - அந்த லைசென்ஸ் வழங்கிய துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் குற்றச்சாட்டின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.கசட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணி ஆகியோர் மீது, தாமாகவே முன்வந்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்ட நெறிகளைப் பின்பற்றி, உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.