Skip to main content

"முஸ்தபாவின் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன்"... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உருக்கம்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

வதந்தியால் உயிர் பறிக்கப்பட்ட மதுரை வில்லாபுரம் இளைஞர் முஸ்தபா பற்றி வேதனையுடன் பதிவிட்டிருந்தோம். அதே வேதனைதான் தொகுதி எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனிடமும் வெளிப்பட்டுள்ளது. “முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப் பற்றி எழுதமுடியவில்லை. தொற்று நோயாளிகளைக் கண்டுபயந்து, விலகி அவர்களை ஊரை விட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூரமன நிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளாவில் கூலிவேலை பார்க்கச் சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்குமுன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அம்மாவுடன் வீட்டில் இருந்துள்ளார். இரண்டு மூன்று நாள்களாக காய்ச்சல் கொண்டிருந்ததால், வீட்டிலேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார்.


  mp



இவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அக்கம், பக்கம் எங்கும் செய்தி பரவியுள்ளது. சிலர் காவல்துறைக்கும் போன்போட்டுச் சொல்லியுள்ளனர். காவலர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிது நேரத்தில் குட்டியானை எனச் சொல்லப்படுகின்ற டாட்டா ஏஸ் வண்டியில் முஸ்தபாவையும், அவர் அம்மாவையும் ஏற்றுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சோதித்துவிட்டு இது சாதாரண காய்ச்சல்தான் என்று மருந்து கொடுத்து அனுப்பிவிட்டனர்.

அவர் பழைய தன் வீட்டிற்கு வந்தாலும், இந்த வைரல் வீடியோ அந்த ஏரியா முழுவதும் பரவியதால், பார்க்கும் இடமெல்லாம் அவரை விரட்டியது வேறு வழியின்றி கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். முஸ்தபா 30 கிலோ மீட்டர் கடந்து திருமங்கலத்தில் உள்ள இரயில்வே கிராஸிங்கில் வரும்போது, அங்கு சரக்கு இரயில் வந்துகொண்டு இருக்கையில், ""காசும் இல்லை... இல்லாத நோய் நமக்கு வந்ததாகச் சொல்லி ஊர் விரட்டுகிறது என அவமானம் தாங்கமுடியாமல் இரயிலின்முன் பாய்ந்த முஸ்தபாவின் உடல் நான்கு துண்டுகளாக சிதறியது. இதில் நம் மனதும் சேர்ந்து சிதறிகிடக்கிறது.

 

incident



வதந்தியினால் முஸ்தபா வாழ்க்கையை வெறுத்து உயிரை விட்டிருக்கிறார். இவ்வளவு கொரூரமான நிலையிலா நாம் இருக்கிறோம். அருவருப்பும் அவமானமும் ஊட்டுஞ்செயலாக அச்செயல் நடந்தேறி இருக்கிறது என்று நினைக்கும்போது மனதை உலுக்கி எடுக்கிறது என்றார்.
 

nakkheeran app



முஸ்தபாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது அம்மா பீவி, "என் மகனை அநியாயமாக கொன்றுவிட்டார்கள். என் மகன் முஸ்தபாவின் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன்'' என்று கதறி அழுதார். தன் மீதும் அக்கம்பக்கத்தார் கரோனா சந்தேகத்துடன் இருப்பதை, படம் எடுப்பதை தவிர்க்கச் சொன்ன அவரது வார்த்தைகளில் தெரிந்தது.

தண்டவாளத்தில் நான்கு துண்டுகளாக சிதறியது முஸ்தபாவின் உடல் மட்டுமல்ல. நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் பண்பாடும் மனிதாபிமானமும்தான்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.