/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/650_33.jpg)
கரோனா வைரஸ், உலகம் முழுதும் பெருந் தொற்றாக பரவி, பல துன்பங்களையும், பெருமளவு உயிர் சேதத்தையும் விளைவித்து வருகிறது. இந்தியாவில் பல கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா தொற்று அதிகமாகாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன மத்திய-மாநில அரசுகள்.
ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் நிவாரணம் வழங்கும் வகையில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன் தவணைகளைச்செலுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்டது. இந்தச் சலுகை காலம் முடிவடைய உள்ள நிலையில், "வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார் த.மா.கா.கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "இந்தச் சலுகை என்பது ஆறு மாதங்களுக்கும் கடன் தவணை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், ஆறு மாதத்திற்கான கடன் தவணைகளைத் தாமதமாக செலுத்துவதற்குக் கூடுதல் கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கடன்கள் ரத்து செய்யப்படுவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆறு மாதங்களுக்கும் வட்டி கூட ரத்து செய்யப்படவில்லை.
எனினும், இதை எல்லோரும் தவிர்த்துவிட முடியாது.நெருக்கடியைச் சமாளிக்க இந்தச் சலுகையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனினும், இது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே தவிர, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் ஒட்டுமொத்தமாகச் சுமை அதிகரிக்கும்.
இந்த ஆறு மாத காலத்திற்குக் கடன்களை ரத்து செய்ய முடியாவிட்டாலும் வட்டித் தொகையாவது ரத்து செய்யலாம். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், 'கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது கடனைத் தாமதமாகச் செலுத்துவதற்கான அவகாசம் மட்டுமே தவிர, இது கடன் தள்ளுபடி அல்ல. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்ப கடன் தொகை மாறுவதால் வட்டி விவகாரத்தில் வங்கிகளே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்களுக்கு சுமையைக் குறைக்க மட்டுமே இந்தக் கால அவகாசம் உதவும்' என்று தெரிவித்துள்ளது. அதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்ததர வர்க்கத்தினரை பாதுகாக்கும் வகையில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன் தவணைகளுக்கு இந்த ஆறு மாதகாலத்திற்கு வட்டித்தொகை முழுவதையும் ரத்து செய்யவேண்டும்" என்கிறார் யுவராஜா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)