Lok Sabha elections; Important announcement in DMK

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

Advertisment

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற தி.மு.க.வினர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆயிரம். விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.