நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் தலைமை கழகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பூத் கமிட்டி மேலாண்மை ஆகியவற்றை அன்பகம் கலை மேற்கொள்வார். ஊடக விவாதக்குழு மேலாண்மை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேலாண்மை ஆகியவற்றை எஸ். ஆஸ்டின் மேற்கொள்வார். சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான பணிகளை என்.ஆர். இளங்கோ எம்.பி. மேற்கொள்வார் என தி.மு.க தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார் ரூமுக்கான தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.