கடந்த 16ஆம் தேதி அதிமுகவின் பொன் விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட சசிகலா கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று (19.10.2021) அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா, திடீரென அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில், எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள், புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும்.
நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள். எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்து ஜெயலலிதா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம். நீங்கள் நினைப்பது புரிகிறது. தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும், மக்கள் ஒற்றுமை உயிர் பெறும். காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம். அம்பாய் பயணிப்போம், இலக்குகளை தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம். எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டு வர சூளூரைப்போம். அஞ்சாது உறுதி ஏற்போம். மக்களுக்காய் நாம் இருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள். கழகத்தின் பாதையில் எம்.ஜி.ஆர் காணாத சோதனையா? ஜெயலலிதா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அக்கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம். மேலும், ஒன்றுபடுவோம்...வென்று காட்டுவோம்... பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். எம்.ஜி.ஆர் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது? ஜெயலலிதா எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம். கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.