KPMunusamy-sasikala

சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச்சந்தித்த போது, 'அரசியல் குறித்து எதுவும் இந்தச் சந்திப்பில் பேசவில்லை' என்றும், 'சசிகலா அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பே இல்லை' என்றும் தெரிவித்தார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்தை ஆதரித்து தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த யாரும் பேசவில்லை. இந்தநிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த அமமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். சசிகலா உறவினர்கள் மற்றும்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் சசிகலாவைப் பார்க்க பெங்களூரு சென்றனர்.

Advertisment

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "எதிரியாக இருந்தாலும் நாங்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும். அவரது குடும்பத்தினருக்கு சேவை செய்யட்டும்" என்று தெரிவித்தார்.

சசிகலா தரப்பினரிடம் யாரும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கே.பி.முனுசாமியின் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் யாராவது சசிகலா தரப்பிடம் தொடர்பு வைத்துக்கொள்கிறார்களா என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

Advertisment