தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதுஅரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முறைகேட்டில் தொடர்புடைய பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த முறைகேடு குறித்து,இன்று(15-09-2020)கூடிய நாடாளுமன்றமக்களவையில் கரூர் எம்.பி ஜோதிமணி பேசியுள்ளார்.
அதில், "தமிழகத்தில், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. லட்சகணக்கான தகுதியுள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கவில்லை. ஆனால், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும் பணக்காரர்கள்மற்றும் கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரம்கோடி ரூபாய்கடன்களை தள்ளுபடி செய்யும் இந்த அரசு, விவசாயிகளின் கடனைக் கூட தள்ளுபடி செய்யாமல், அவர்களை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது.
இச்சூழலில், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய திட்டத்தைக் கூட முறையாக நடைமுறைப்படுத்தாமல் ஊழல் மலிந்துகிடப்பது, வேதனை அளிக்கிறது. ஊழலில், அதிகாரிகள் மட்டுமே பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
ஆளும் அ.தி.மு.க அரசுக்குத் தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தமிழக பா.ஜ.க பல்வேறு அரசுத் திட்டங்களை பகிரங்கமாகவே கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
அரசு திட்டங்கள், முறையாகஎவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல், தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடுகள் இம்மாதிரியான ஊழலுக்கே வழிவகுக்கும். தமிழகத்தில் நடந்துள்ள இந்த மாபெரும் ஊழலை விசாரிக்க, உடனடியாக மத்திய அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு பேசியுள்ளார்.