Skip to main content

கருநாடக இடைத்தேர்தல் முடிவு - பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி! கி.வீரமணி 

Published on 08/11/2018 | Edited on 08/11/2018 

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு ஏற்பட்ட படுதோல்வி - எதிர்காலத்தில் அது முற்றிலும் தோல்வி அடையும் என்பதற்கான அறிகுறி என்றும், எல்லா வகையிலும் தோல்வி காணும் மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட - மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 அண்மையில்  கருநாடக  மாநிலத்தில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரசு - ம.ஜ.த. கட்சி கூட்டணி 4 இடங்களில் பெருவெற்றி பெற்றுள்ளது.
 

ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில்கூட ஏற்கெனவே எடியூரப்பா (2014 இல்) 3 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது - அங்கும் சரிவுதான்!
 

இப்போது அவரது மகன் இராகவேந்திரா என்பவர் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதே தொகுதியில் - கடும் முயற்சிக்குப் பின்னரும் - வெற்றி பெற்றிருக்கிறார் என்பது, கருநாடகத்தில் பா.ஜ.க.விற்கு தோல்வி முகம் தொடருகிறது என்பதையே காட்டுகிறது!
 

கருநாடகாவில் தோல்விப் படலம்!
 

பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. 2004 முதல் வெற்றி பெற்ற ஒரு தொகுதி - 14  ஆண்டுகளாக அதன் வசம் இருந்த தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா வெற்றி பெற்றிருக்கிறார் - அதுவும் 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்!
 

மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. வெற்றி என்பதுதான் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அதற்குக் கிடைத்த ஆறுதல் பரிசு ஆகும்!


பெல்லாரி தொகுதியை எப்படியும் இம்முறை பா.ஜ.க. தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்று  படாதபாடு பட்டது அக்கட்சி!
 

அங்கு செல்வாக்குள்ள மனிதராகக் கருதப்படும் பி.சிறீராமுலு போன்றவர்களே கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டார்கள்.
 

எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை!


தென்மாநிலங்களைக் குறி வைக்க பா.ஜ.க. - மோடி - அமித்ஷா பல தனிக் குழுக்களை ஆதித்ய பிர்லா - அம்பானி போன்ற பல கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அறிவு ஜீவிகள் குழு - குறிப்பாக கேரளாவிலிருந்து கருநாடகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியின் நெருக்கக் குழுவில் ஒருவராக உள்ள எம்.பி.,  போன்றவர்களிடம் தனிப் பொறுப்பே கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் ஊடகங்களில் பேச்சுகள் கசிந்துள்ளன.
 

ஆந்திரா - தெலங்கானாவில் நிலைமை என்ன?
 

ஆந்திராவில், பா.ஜ.க. இனி எளிதில் பழைய செல்வாக்கைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது.


தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசமும், காங்கிரசும்  இணைந்து கூட்டணியாக இணைந்து சந்திரசேகர ராவையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதால் - இரண்டு கட்சிகளுக்கும் (தெலங்கானா  டி.ஆர்.எஸ். ஆளுங்கட்சி - பா.ஜ.க. இருவருக்கும்) வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
 

கேரளாவில் மதவெறி ஆயுதம்!
 

கேரளாவில் - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்திக் கடமையாற்றும் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மத உணர்வை விசிறிவிட்டு, குளிர்காய நினைத்து திட்டமிட்டே பா.ஜ.க. அங்கு மதக்கலவரங்களுக்குத் தூபம் போட ஏற்பாடு ஆன விஷயம் அங்குள்ள பா.ஜ.க. தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி - அம்பலமாகி விட்டது!


‘கடல் வற்றிக் கருவாடு தின்னக் காத்திருந்த (பா.ஜ.க.) கொக்கு குடல்வற்றி செத்த’ பழைய உவமையை நினைவூட்டுவதாக உள்ளது பரிதாபத்திற்குரிய பா.ஜ.க. நிலை!
 

தமிழ்நாட்டின் நிலைமை!
 

தமிழ்நாட்டில் தூண்டிலைத் தூக்கி அலைகிறார்கள் - திரைப்பட நடிகர்களின் அரசியல் கட்சி - ஒரு கட்சி கருவிலேயே இருக்கிறது! எப்போது பிறக்கும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியாத புதிராக இருக்கும்போது, அதனைத் தூக்கிக் கொஞ்சி மகிழுவதுபோல, காட்டி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார்கள். - குழந்தை கழுத்தில் உள்ள செயினைக்கூட கவரத் துடிப்பவர்களைப்போல, அரசியல் புரோக்கர்கள்மூலம் செய்த முயற்சிகள் வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையை வாட்டி வதைக்கிறது!


தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டு என்றாலோ ஓட்டம் பிடிப்பவர்களாகவே அத்துணைக் கட்சிகளும் உள்ளன! வேண்டுமானால், சில கூலிப் படைக் கட்சிகள் அகப்படக்கூடும்! காரணம், இங்குள்ள பெரிய கட்சிகளோடு போட்டியிடும் நிலையில் இல்லை.  தமிழ்நாட்டில் என்னதான் ஊடகங்களால் ஊதிப் பெருக்கம் நடைபெற்ற போதிலும்கூட - பா.ஜ.க. போட்டிப் போடுவது  ‘‘நோட்டா’’ வுடன் மட்டுமே!
 

இது பெரியார் மண்தான்! திராவிட பூமிதான்  என்பதை மாற்றிட எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும் நடக்காது - பிழைக்காது.
 

என்றாலும், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் குறிப்பாக மதச்சார்பின்மை சமூகநீதியில் நம்பிக்கையுள்ள கட்சிகள், மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று உண்மையிலேயே கருதுபவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தன்முனைப்புக்கு இடம் தராமல், பொதுநோக்கம் நிறைவேறிட, பொது எதிரியை வீழ்த்திடுவது முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்வது மிகவும் அவசர அவசியம்!
 

பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி - சிக்கல்!
 

கருநாடக இடைத்தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை மணி பா.ஜ.க.விற்கு!
 

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவுக்குப்பின் பொருளாதாரம் மட்டுமல்ல அதைக் காப்பாற்ற வேண்டிய, ஒழுங்குபடுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகளும்கூட பா.ஜ.க., மோடி அரசின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்ப முடியவில்லை.

k.veeramaniவிண்ணை முட்டும் விலைவாசி, உச்சமான வேலையில்லாத் திண்டாட்டம் (69 சதவிகிமாக கடந்த 2 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது என்று இந்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது) - பெட்ரோல், டீசல் விலைகளின் விலையேற்றங்கள் - விவசாயிகளின் தற்கொலை; பல்லாயிரக்கணக்கில் கல்வித் துறையில் காவி மயம் - இப்படி எல்லாவற்றிலும், எல்லா தரப்பு மக்களின் ஏமாற்றத்திற்கும் ஆளாகி, எதிர்ப்பையும், அதிருப்தியையும் சந்திக்கிறது மோடி அரசு!


மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என்பதைப்  புரிந்துகொள்ளாமல், ‘மகுடி வாசிப்பது’ பயன்படாது!

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Further increase in water flow in Cauvery river

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (22.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (21.07.2024) மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் 7வது  நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பாஜக நிர்வாகி அஞ்சலை கைது

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nn

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

nn

தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.