Skip to main content

வாய்ப்பை நழுவவிட்ட சீமான், கமல்...!!!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்திருக்கிறார் கமலஹாசன். மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார் கமலஹாசன். 

 

kamal



மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னர் கமலஹாசன் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் அல்லது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவரிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பொறுத்திருங்கள் என்று பதிலளித்தார். ஆனால் வேட்பாளர்கள் அறிவிப்பில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 
 

கமலஹாசன் போட்டியிட்டால் அந்த ஒரு தொகுதியில்தான் கவனம் செலுத்த நேரிடும், அவர் போட்டியிடாததால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு கமல் பிரச்சாரம் செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும் என்று தெரிவித்தனர். 

 

இதனால் கமலஹாசனின் ரசிகர்களைப் போலவே ''பொதுமக்களும் கமலஹாசன் போட்டியிடவில்லையா?'' என ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அரசியல் கட்சியினர்களோ பெருமூச்சு விட்டனர். 
 

இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேர்தலிலும் தனது பிரச்சார வீயூகம் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.


2016ல் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சீமான், இந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தல்களில் அவர் போட்டியிடவில்லை. சிவகங்கை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற பேச்சும் இருந்து வந்தது. 
 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சீமான் மற்றும் கமல் கட்சிக்கு புதிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும், மேலும் நடுத்தரமான வயதுள்ளவர்கள் சிலரும் வாக்களித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

சிவகங்கையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதை ஓரளவு சரியாகவே கொடுத்திருந்தாலும், ''இந்தப் பணத்துக்காக எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள். அந்த கட்சி ஜெயித்தால் தொகுதி நாஸ்தியாகிவிடும். அதோடு எப்போதுமே எங்கள் அதிமுக இங்கே நிற்க முடியாமல் போய்விடும். அதனால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். எங்கள் பங்காளி தினகரனின் வேட்பாளருக்கு போட்டாலும் பாதகமில்லை'' என்று அதிமுகவினர் கூறியதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர், திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேண்டா விருப்பதாகத்தான் வேலை செய்தார்கள், ராமநாதபுரத்திலும் இதே நிலைமைதான். இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடபடாத நிலையில் ராமநாதபுரத்திலோ அல்லது சிவகங்கையிலோ கமலஹாசன் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்றனர்.

 

seeman



கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்தித்த சீமானை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், இந்த இடைத்தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி போட்டியிட்டிருந்தால் கட்சியினருக்கு ஒரு உற்சாகமும், நம்பிக்கையும் பிறந்திருக்கும். சிவகங்கையில் சீமான் போட்டியிட்டிருந்தால் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்கள் ஒத்துழைத்திருப்பார்கள். மேலும் பிரதான கட்சிகளின் நிர்வாகிகளோ, தொண்டர்களோ அந்தக் கட்சிகளுக்காக தீவிரமாக பணியாற்றவும் இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீமான் இங்கு பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்