Skip to main content

கலைஞர் -97 காணொளிக் கவியரங்கம்!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, 7-ந் தேதி மாலை 4 மணியளவில், ஜூம் செயலி மூலம்  சிறப்புக் காணொளிக் கவியரங்கம் நிகழ்ந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சார்பில், கவிச்சுடர் பொற்கைப்பாண்டியன் இதை ஏற்பாடு செய்திருந்தார். 


கவிமாமணிகள் ஆரூர் தமிழ்நாடனும், வெற்றிப்பேரொளியும் கவியரங்கைக் கவிபாடித் தொடங்கிவைக்க, ஈஸ்வரராஜா வரவேற்புக் கவிதை வாசித்தார். நிகழ்சிக்குத் தலைமை ஏற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் “கலைஞரைப் போன்ற ஒரு தலைவரை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவரது நினைவாற்றலுக்கு எவரும் ஈடு இணையில்லை. நான் மாற்றுக்கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களோடு தி.மு.க.வில் சேர்ந்த நிலையில், அவர் என்மீது பேரன்பு காட்டினார். நினைவாற்றல் குறைந்த நிலையிலும், என்னைப் பார்த்ததும் மதுரை சரவணனா? என்று கேட்டு என்னை நெகிழவைத்தார். கலைஞர்தான் உலக தமிழர்களின் ஒரே ஒப்பற்றத் தலைவர். கலைஞர் இல்லை என்றால் தமிழகம் விடிந்திருக்காது. அப்படிப்பட்ட அந்த மாபெரும் தலைவரை, நீங்கள் கவிபாடி வாழ்த்துவது பெரும் மகிழ்வைத் தருகிறது” என்றார் உற்சாகமாய்.

கவிச்சுடர் பொற்கைப்பாண்டியன் தனது தலைமை கவிதையில், "கலைஞரே உங்களால்தான், எங்கள் இடுப்பு வேட்டி தோளுக்கு வந்தது. எங்கள் கையில் இருந்த செருப்பு காலுக்கு  வந்தது. எங்கள் வானத்திற்கு சூரியன் வந்தது. எங்கள் வாழ்வுக்கு விடியல் வந்தது” என்று கைத்தட்டல் வாங்கினார். 

 

 


தொடர்ந்து, கவிச்சுடர் கல்யாணசுந்தரம், திருச்சி கவிசெல்வா, சித்தார்த் பாண்டியன், ரேவதி அழகர்சாமி, அன்புசெல்வி சுப்புராஜ், தாரமங்கலம் முத்துசாமி, ஒசூர் மணிமேகலை, கனகா பாலன், கிருஷ்ண திலகா, கருப்பையா, சரஸ்வதி பாஸ்கரன், கிருஷ்ணா கிருஷ், இம்மானுவேல் உள்ளிட்ட  உலக அளவிலான  97 கவிஞர்கள் இதில் பங்கேற்றுக் கலைஞருக்கு கவிமாலை சூட்டினர். கவிஞர் தொல்காப்பியன் கவிதைகளால் நன்றி சொன்னார். கலைஞருக்கான இந்தக் கவியரங்கம் அன்றைய மாலைப் பொழுதைக் கவிதைகளால் நனைத்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.