சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், "ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக, தொண்டர்களாகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அந்த இதயக் கோவில்தான் இன்று நினைவிடமாக உருமாறியிருக்கிறது.
இதுவெறும் நினைவிடம் அல்ல. உண்மை ஒளிவீசும் இடம். நேர்மை ஒளிவீசும் இடம். வாய்மை ஒளிவீசும் இடம். சத்தியம் ஒளிவீசும் இடம். சாதனைகள் ஒளிவீசும் இடம். தமிழ்நாட்டில் தீயசக்திகள் தலையெடுத்து விடாமல் இருப்பதற்காக தினமும் உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு உரைக்கும் இடம். ஓய்வு இல்லாமல் உழைத்து உழைத்து தமிழக மக்களை உயர்த்திவிட்ட மனித தெய்வம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரம் இங்கு ஒலித்துக்கொண்டிருக்கிறது. மக்களால் நான். மக்களுக்காக நான் என்ற வீரவணக்கம் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா என்ற மூன்று எழுத்து நம்முடைய உயிர் எழுத்து. இந்த நினைவிடத்திற்கு வரும்போதெல்லாம் வீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும்" இவ்வாறு பேசினார்.