Skip to main content

“பிரதமரே சொன்ன பிறகும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம்” - மணிப்பூர் குறித்து அமைச்சர் துரைமுருகன்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

"It is surprising that the Prime Minister is silent even after he said it" - Minister Durai Murugan on Manipur

 

வேலூர் மாவட்டம், காட்பாடி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பார்லிமென்ட் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது; முன்கூட்டியே நடந்தாலும் நடக்கலாம். இருளில் செல்லும்போது வழியில் பாம்பு வரலாம் என்ற முன் யோசனையில் கையில் கம்பு எடுத்துச் செல்வோம். அதைப்போன்று எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் என்னைத் தனியாக அழைத்து, ‘யாருக்கு என்ன துறை என்று ஒதுக்கியிருக்கிறேன். உங்களுக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு நான் நீர் வளத்துறையை எடுத்தேன். விவசாயிகள் வாழ தண்ணீர் அவசியம். விவசாயி மனம் குளிர்ந்தால், நாடு மகிழும் என்று நீர்வளத்துறையை எடுத்தேன். இது அண்ணாதுரை காலத்தில் கலைஞரிடம் இருந்தது. அவருக்கு பிறகு என்னிடம் இருக்கிறது.

 

காவிரி பிரச்சனைக்காக 17 ஆண்டுகளாக நடுவர் மன்றத்தில் போராடினோம். அதன் ஒவ்வொரு அடியும் எனக்குத் தெரியும். பல அதிகாரிகள் மாறியிருக்கிறார்கள். அவர்களை விட இந்த விவகாரத்தில் என்ன இருக்கிறது? என்று எனக்குத் தெரியும். காவிரி, பெரியார், கிருஷ்ணா நதி விவகாரம் என்று பல சிக்கல் இருக்கிறது. இதில் அந்நிய மாநிலத்துடன் நாம் ராஜதந்திரத்தைக் கையாள வேண்டும். கேரள, கர்நாடகத்தில் அங்கு பிரபலமான புதியவர்கள் வந்திருக்கிறார்கள். அவசரப்படக் கூடாது. அதற்காகத் தான் பொறுமையுடன், பணிவான பதிலை அளித்திருக்கிறோம். ஆனால், பத்திரிகைகளில் தான் மேகதாது குறித்துப் பரபரப்பாக செய்தி வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட முடியாது. ஒரு அணை கட்ட மத்திய அரசிடம் பல அனுமதிகள் வாங்க வேண்டும், அணையின் கீழ் பகுதி இசைவு இல்லாமல் அணையைக் கட்ட முடியாது, எல்லாம் எனக்குத் தெரியும். இதில் 26 வருட அனுபவம் இருக்கிறது. எடுத்த எடுப்பில் எல்லாம் செய்து விட முடியாது.

 

காட்பாடி தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ? அனைத்தையும் செய்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் மக்கள் தொண்டு செய்வோம். இந்தத் தொகுதிக்குத் தொழிற்சாலை ஒன்று வேண்டும் என்று சிப்காட் மற்றும் டைடல் பார்க் கொண்டு வர இருக்கிறோம். தொழில்துறை அமைச்சர் ராஜா அடுத்த மாதம் 4ம் தேதி இங்கு வருகிறார். அவர் பார்வையிட்ட பிறகு எங்கு என்ன வரும்? என்று தெரியவரும். இந்தத் தொகுதியில் நுாறு ஓட்டுகளுக்கு 10 பேரை ஒதுக்கியிருக்கிறோம். 10 பேரும் ஒழுங்காகக் கவனம் செலுத்தினால், நுாறு ஓட்டு வரும் ஜெயித்து விடலாம். 10 பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போனால் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த முறை அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் 56 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார், இந்த முறை 60 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். 

 

மேலும் அவர், “திமுக வரலாற்றில் இன்னும் நூறாண்டுக்குப் பிறகு கூட திமுகவில் யார் யார் பொதுச் செயலாளராக இருந்தார்கள் என்றால் காட்பாடியைச் சேர்ந்த துரைமுருகன் இருந்தார் என்கிற பொழுது இந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும். பிள்ளைகள் அப்பாவைப் பார்த்து வாழ்த்து சொல்வதைப் போல நான் எண்ணிக் கொள்கிறேன். என் மக்களை நான் வணங்குகிறேன். ஜவஹர்லால் நேரு, ‘என்றாவது ஒருநாள் நான் மறைந்தால் அப்பொழுது என்னைச் சுட்டு சாம்பலாக்கி அதை நதியில் கரைக்கக் கூடாது. விமானத்தின் மூலம் இந்திய மண்ணில் தூவுங்கள். ஏனென்றால், நான் மண்ணுக்குச் சொந்தக்காரன்’ என்று சொன்னார். அப்படி ஒரு சொந்தத்தை நான் காட்பாடியில் சொந்தம் ஆக்கி வைத்திருக்கிறேன். உங்களுடைய சேவகனாக இருப்பேன்” என உருக்கமாகப் பேசினார். 

 

கூட்டம் முடிந்து செல்லும்போது மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பிரதமர் மோடியே சொன்னார். நாடே வெட்கித் தலை குனிகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஆச்சரியம்தான்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு..’ - காவிரி விவகாரத்தில் அமைச்சர் பதில்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
duraimurugan said Karnataka on Cauvery will be taken in consultation with cm stalin

வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1-5-ம் வகுப்புகளில் பயிலும் 1296-மாணவர்கள், 1244-மாணவிகள் மொத்தம் 2540 மாணவ மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், “தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்பட்டாலும் அத்தியாவசிய தேவைக்காக ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி யை கூட தர மாட்டேன் என அடம்பிடித்தார்கள். நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அதன் பிறகும் அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் எனச் சொல்கிறார்கள்.

ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்தி 574 கனஅடி ஆகும். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. கே.ஆர்.எஸ் ஆணையில் 105 ஆடி தண்ணீர் உள்ளது. கபினியில் 64 அடி தண்ணீர் உள்ளது. இது போன்று நமக்கு தண்ணீர் தரும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இதுவரை(15.07.2024)  4,047 கன அடி தான் மேட்டூருக்கு தண்ணீர் வந்துள்ளது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகம் அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதில் கர்நாடக மேல்முறையீடு செய்தால் ரொம்ப நல்லது. அது நமக்கு தான் கை கொடுக்கும். மேலும் கர்நாடகா தண்ணீர் கொடுக்கிறோம் என சொன்னாலும், கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வந்து தான் ஆகணும்” என்றார்.

இதையடுத்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவேரி விவகாரத்தில் தமிழக மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படாமல் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “ எடப்பாடி பழனிசாமிக்கு காவேரி விவகாரம் குறித்து அதிகமாக தெரியாது. அவர்கள் ஆட்சியில் மட்டும் கேட்ட உடனேயே தண்ணீர் வந்து விட்டதா?  கூட்டணி என்பது வேறு, அவர்களின் பிரச்சனை வேறு. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறு கர்நாடகாவிற்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்திற்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. நான் மிக நீண்ட காலமாக காவேரி விவகாரத்தை கையாண்டு வருகிறேன் இதில் உள்ள எல்லா பிரச்சனை குறித்தும் எனக்கு தெரியும்” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறித்து கேட்டதற்கு, “இன்வெஸ்டிகேஷனில் உள்ளது” என்றார்.

முன்னதாக அவர் பேசுகையில், “காமராஜர் படிக்காதவராக இருந்தாலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்ததால் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த கலைஞர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் இரண்டு முட்டைகளை போட்டு சத்துணவாக மாற்றினார். அன்றைக்கு காமராஜர் பிள்ளைகள் படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்றைக்கு காமராஜருக்கு ஏற்பட்ட ஞானோதயம் போல் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Minister Durai Murugan suddenly fell ill

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார்.  மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.  இந்த நிலையில் முதல்வருடன் வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.