Skip to main content

“கண்டிப்பாக சந்திப்பேன்” - ‘பத்து தல’ திரையரங்க விவகாரம் குறித்து உதயநிதி 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

"I will definitely meet" - Udhayanidhi on the issue of 'Pathula' theater

 

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அவரது ட்விட்டர் பக்கத்தில் "அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், "இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர்" என விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

 

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அமைந்தகரை வட்டாட்சியரும் திரையரங்குக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்மணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளே விட மறுத்த திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.   

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இச்சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “தீண்டாமை செயல் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. திரையரங்க உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள் என நினைக்கிறேன். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக கண்டிப்பாக அந்த சமுதாய மக்களை சந்தித்து பேசுகிறேன்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இ.பி.எஸ்.ஸுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி பதிலடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Minister Udayanidhi Stalin's barrage of response to E.P.S 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25.03.2024) பிரச்சாரம் மேற்கொண்ட போது, “நானாவது எய்ம்ஸ் செங்கல்லை காட்டினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எனத் தெரிவித்து பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் படத்தை காண்பித்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணி பற்றி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விமர்சனம் செய்யப்படுறது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றோம். பின்னர் தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம். அ.தி.மு.க.வும், தேமுதிகவும் சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் எந்த பிரச்சனைகள் குறித்தும் வாய் திறப்பதில்லை. தி.மு.க. ஆட்சியில் ஒரு புயலையே தாக்குப்பிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பல புயல்களை திறம்பட எதிர்கொண்டுள்ளோம். டிசம்பர் மாதம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வரும் என அறிக்கை விட்டது ஆனால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. கனமழையில் தூத்துக்குடி மிதந்து கொண்டிருந்த போது டெல்லி சென்றவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். மழை பாதித்த விவசாயிகளுக்கும், பழுதான வாகனங்களுக்கும் இழப்பீடு தராத அரசு தி.மு.க. அரசு.

Minister Udayanidhi Stalin's barrage of response to E.P.S 

மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஒரு அரசு ஓடோடி வந்து உதவி செய்திட வேண்டும். ஓட்டு போட்டு எந்த உதவியும் செய்யாத அரசு தமிழ்நாட்டுக்கு தேவையா. அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தூத்துக்குடி பக்கிள் ஓடை 80% வேலைகளை அ.தி.மு.க. ஆட்சியில் செய்து முடித்திருந்தோம். மக்களுக்காக பக்கிள் ஓடை பணியை தி.மு.க. அரசு முடிக்கவில்லை. அது முடிக்கப்பட்டிருந்தால் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்காது.

அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு தி.மு.க. தான் பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளது. கள்ளக்கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் நினைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருக்க முடியும் ஆனால் நாங்கள் சுயமாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்கு மக்கள் பெரியது, தி.மு.க.வினருக்கு ஆட்சி பெரியது. அ.தி.மு.க. யாருக்கும் மறைமுகமாக ஆதரவை தர மாட்டோம். அ.தி.மு.க.வுக்கு பதவி வெறி கிடையாது.

ஆளுநரால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பின்பு ஏன் நாங்கள் ஆளுநரைப் பற்றி பேச வேண்டும். பழனிசாமி சிரித்துக் கொண்டே இருப்பேன் என நினைக்க வேண்டாம். நான் வாயைத் திறந்தால் என்ன ஆகும் என்று தெரியாது. பிரதமர் தமிழகம் வந்தபோது தமிழக முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீர்கள்?. நீங்களும் அதேதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க?. நீங்கள் சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?” எனக் கேட்டு பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சந்தித்த படங்களை காண்பித்தார்.

Minister Udayanidhi Stalin's barrage of response to E.P.S 

அதே சமயம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போட்டோவை காண்பித்து, “கீழே சில்லறை விழுந்துவிட்டது. சில்லறையை தேடிக்கொண்டிருக்கிறார். இது மாதிரி ஒரு போட்டோ நான் யார் காலிலாவது விழுந்த மாதிரி காட்டுங்க. அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் இவரை எடப்பாடி பழனிசாமி என அழைக்கமாட்டார். பாதம் தாங்கி பழனிசாமி என்றுதான் அழைப்பார்” எனப் பதிலடி கொடுத்தார். 

Next Story

தேர்தல் பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
election campaign; Minister Udayanidhi Stalin's resilience

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.