Skip to main content

“அப்போதைய அதிமுக அரசுக்கும் இப்போதைய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” - பாமக நிறுவனர் ராமதாஸ்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

I thank the then AIADMK government and the present government

 

தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது முதல் வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

அப்போதைய அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அரசாணை வெளியிட்டதற்கு பலதரப்பினரும் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். அதேபோல் தமிழில் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி, சில திருத்தங்களை அரசு செய்துள்ளது. தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான 20% இடஒதுக்கீட்டின் பயன்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டும் சென்றடைவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

 

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய கலைஞர் அரசு கொண்டு வந்த 20% இடஒதுக்கீட்டை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதால், முழுக்க, முழுக்க தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இடஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதன்படியே கடந்த 2020ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு சட்டத் திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில்,  புதிய வழிகாட்டு விதிகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிகளின்படி அரசின் எந்த வேலைவாய்ப்பாக இருந்தாலும் அதற்கான அதிகபட்சக் கல்வித் தகுதியை ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இதனால் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடியதோ, அந்த நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு இயற்றிய அப்போதைய அதிமுக அரசுக்கும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அரசாணை பிறப்பித்த இப்போதைய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அதே நேரத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக மேலும் ஒரு கட்டுப்பாட்டை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்த விரும்பும் கூடுதல் கட்டுப்பாடு ஆகும். கடந்த காலங்களில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இடஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கில வழியில் போட்டித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். இப்போதும் கூட ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் வழியில் படித்ததாக சான்றிதழ் பெற்று, ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதி, 20% சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அது தடுக்கப்பட வேண்டும்.

 

அது மட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்புகளில் 20% சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். தமிழைப் பயன்படுத்துவது போட்டித் தேர்வுகளிலும், பணியிலும் தொடர வேண்டியது கட்டாயமாகும். அதற்காக போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கூடுதல் நிபந்தனையையும் புதிய அரசாணையில் அரசு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

 

 

சார்ந்த செய்திகள்