Skip to main content

“கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவது ஏன் என்பது தெரியவில்லை..” - ராமதாஸ்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

"I don't know why the corona casualties are being covered up." - Ramadoss

 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அதன் தாக்கம் பெரும் அளவில் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும் கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டதாகவும், அதுகுறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. கரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்.

 

கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நேற்று (14.05.2021) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 297 பேரும், 12ஆம் தேதி 293 பேரும் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அந்த நேரங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் இல்லாமல் நோயர்கள் உயிரிழப்பதும் தொடர்வதாக செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் எதுவும் அரசின் அதிகாரப்பூர்வ கரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

தமிழ்நாட்டின் கள நிலவரத்தைப் பார்க்கும்போது இத்தகைய செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட முடிவதில்லை. உதாரணமாக, மதுரை மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் முறையே 7 பேர், 14 பேர், 14 பேர், 13 பேர், 7 பேர், 9 பேர், 11 பேர் உயிரிழந்ததாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால், மதுரையில் மாநகரில் உள்ள 10 சுடுகாடுகளுக்கு மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும், அவற்றில் 90%க்கும் கூடுதலான உடல்கள் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்றும், அதற்காக 3 தகன மேடைகள் புதிதாக ஏற்படுத்தப்படுவதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும், அரசு கணக்குக்கும் இடையிலான வேறுபாட்டை இது மிகத் துல்லியமாக காட்டுகிறது.

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்குக் காட்டப்படும் மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. அங்கு கடந்த 8ஆம் தேதி மூவரும், 11ஆம் தேதி ஒருவரும், 13ஆம் தேதி மூவரும் மட்டுமே உயிரிழந்ததாகவும், 9, 10, 12, 14 ஆகிய நாட்களில் ஓர் உயிரிழப்பு கூட இல்லை என்றும் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை இருப்பதாகவும், பலரும் உடல்களை எரிப்பதற்காக காத்துக்கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 12ஆம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிக்கையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 11ஆம் தேதி மட்டுமே ஒருவர் உயிரிழந்தார்; 12ஆம் தேதி எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்தத் தகவலை உண்மை என எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.

 

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துக்கொண்டு சுடுகாடுகளைத் தேடி பலரும் அலைவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழக அரசுத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காட்டப்படுகிறது. உயிரிழந்த மற்றவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக அதிகாரிகள் கணக்குக் காட்டுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மிக மோசமான கட்டத்தை அடைந்துவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து மருத்துவம் செய்து வருகின்றனர். நோய்ப் பரவல் தடுப்பு, நோய்க்கு சிகிச்சை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நிலைமையின் தீவிரத்தை அனைவரும் வெளிப்படையாக புரிந்துகொள்ள வேண்டும். கள நிலைமையை வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை. மாறாக, கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மறைத்து, நிலைமை இயல்பாக இருப்பது போன்ற வெளித்தோற்றத்தை ஏற்படுத்த அரசும், அதிகாரிகளும் முயன்றால், கவனிக்கப்படாத புண் உள்ளுக்குள் புரையோடி குணப்படுத்த முடியாத நிலையை அடைவதைப் போன்று, தமிழகத்தின் கரோனா நிலையும் மாறிவிடக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும்.

 

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது சென்னையில் 236 கரோனா உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படாதபோது அதற்கு எதிராக கடுமையான கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் அவரது முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே தகவல்களை மறைக்க வேண்டாம்; உண்மையாக தகவல்களைக் கூறுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதன்பிறகும் கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பான செயலாகும்.

 

கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும்போது ஒருவகை பதற்றமும், அச்சமும் ஏற்படலாம். அதில் தவறு இல்லை. ஒருவகையில் கரோனா பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்கவும், ஊரடங்கை மதித்து நடப்பதற்கும் அது உதவக்கூடும். எனவே, கரோனா உயிரிழப்புகளை மறைக்காமல், உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்; முழு ஊரடங்கை கடுமையாக செயல்படுத்தி கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். 

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விழுப்புரத்திலும் விஷ கள்ளச்சாராய விற்பனையா? - பாமக நிறுவனர் ராமதாஸ்  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
ramadoss question illicit Liquor sale in Villupuram too?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று சென்னை சேர்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து ராயாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது. நச்சு சாராயம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற சுமை தூக்கும் தொழிலாளி சென்னையிலிருந்து  சரக்குந்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 17-ஆம் தேதி விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சரக்கு இறக்கி முடித்த பிறகு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த அவர் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

வீட்டில் வைத்து அந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை 20-ஆம் தேதி குடித்த கிருஷ்ணசாமி கடுமையான வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பின்னர் இராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டாலும் கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த கூலி தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு ஏற்பட்ட பாதிப்பு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலும் நச்சு சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா? அல்லது கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தை எவரேனும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு கொடுத்தார்களா என்ற வினா எழுகிறது. இதற்கு விடை காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நச்சு சாராயம் விற்கப்படுவதைத் தான் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. கள்ள சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனால் எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எவருக்கேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.