H.Raja says If the Chief Minister does something seriously, the action of the Central Government will also be serious

2014டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத்தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாஜக கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி இன்று (10-02-24) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என யாராவது சொன்னால், அந்த அரசாங்கம் இந்திய சட்டப்படி நடத்தப்படவில்லை என பொருள்.

இந்திய அரசியல் சட்டப்படி நடக்கவில்லை எனில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.ஏனெனில் 1976ல் அவரது அப்பா நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சீரியசாக ஏதும் செய்தால்மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீரியசாக இருக்கும்” என்று கூறினார்.