H. Raja says BJP is the reason why Edappadi Palaniswami was in charge

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் நிர்வாகி எச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”ஜெயலலிதா இறந்த பின்பு சிதறி கிடந்த அதிமுகவை பா.ஜ.க தான் ஒன்றிணைத்தது. அந்த வகையில் தான் அதிமுகவோடு பா.ஜ.க கூட்டணி வைத்தது. ஆனால், எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் அது எங்களுக்கு உதவவில்லை. ஏனென்றால், அதிமுகவோடு கூட்டணி வைத்த பின்பும் பாராளுமன்றத்தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ பெரிய வெற்றி வாய்ப்பு அமையவில்லை. மிகவும் சொற்ப இடங்கள் தான் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் அவர்களை ஒட்டி வைக்கவில்லை என்றால் இன்றைக்கு அது நெல்லிக்காய் மூட்டை தான். எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்ததற்கு பா.ஜ.க கட்சி தான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். தனித் தனியாய் பிரிந்து கிடந்தவர்களை இன்று சேர்த்தவர்கள் நாங்கள் தான். அனைத்து விஷயங்களிலும் சாட்சியாக நான் கூடவே இருந்திருக்கிறேன். அதனால், அவர்கள் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டோம் என்று நினைத்து கொள்ள வேண்டாம். அதனால், காலம் அதற்கான பதிலை சொல்லும்.

மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருக்கிறது. அதே போன்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இங்கு அதிமுக எங்கே இருக்கிறது?. அதனால், அதிமுக இன்றோடு முடிந்தது என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக பிரிந்ததனால் பா.ஜ.க.வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.இதற்கு முன்பு நான் பேசிய போது கூட, அதிமுகவின் தலைமையோ அல்லது பா.ஜ.க.வின் தலைமையோ கூட்டணி முறிந்தது என்று சொல்கிற வரையில் நான் எந்தவித கருத்தும் கூற மாட்டேன் என்று தான் கூறினேன். ஆனால், இன்றைக்கு நாங்கள் என்னமோ அவர்களை எங்கள் கட்டுக்குள் வைத்தது போலும், அதற்கு இன்று வெளியே சென்று கொண்டாடி வருவது போல் செயல்படுகிறார்கள்.

ஜெயலலிதா மறைந்த பிறகு திமுகவை கொண்டாட முடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்திருந்த பா.ஜ.க.வை எந்த அதிமுக தலைவர்களும் மறந்துவிட வேண்டாம். பா.ஜ.க இல்லையென்றால் இன்றைக்கு இருக்கிற அதிமுக கட்சியே கிடையாது. ஆனால், இனிமேல் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் தான். நாங்கள் எதையுமே இழக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை காப்பாற்றின மோடிக்கு தமிழ்நாட்டில் எத்தனை பேர் நன்றியோடு இருக்க போகிறார்கள் என்று தான் பார்த்துவிடலாம்?. மேலும், இந்த கூட்டணி முறிவை பற்றி அவர்கள் பிறகு உணருவார்கள். இந்த கூட்டணியை விட்டு வெளியே சென்றது அவர்களின் நன்றி மறந்த செயல்” என்று கூறினார்.