Skip to main content

குட்கா பொருட்கள் சட்டமன்றத்துக்கு எதற்காக எடுத்து செல்லப்பட்டன? -உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு விளக்கம்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
chennai high court

 

 

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே, சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன எனவும், சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும்,  திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்கு,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

உரிமை மீறல் நோட்டீஸை  எதிர்த்த வழக்கில், ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதிட்டனர்.

 

அப்போது அவர்கள், ‘உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர்.  கு.க.செல்வத்துக்காக நாங்கள் ஆஜராகவில்லை.  பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உரிமை மீறல் குழுத் தலைவராக இந்த பிரச்சனையை விசாரிக்கக்கூடாது.  

 

உரிமை மீறல் பிரச்சனையில், சட்டமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. பாரபட்சமான முறையில், முன்கூட்டியே தீர்மானித்தும்,  சபாநாயகர் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி, உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்துவிட்டார். 

 

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே,  சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்கள்  எடுத்து செல்லப்பட்டன.     சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை. எந்த உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.  

 

சட்டமன்றத்துக்குள் கருத்துரிமை உள்ளது.  கருத்து தெரிவித்ததற்காக உரிமை மீறல் பிரச்சனை எழுப்ப முடியாது.  உரிமை மீறல் நோட்டீஸ் சட்டவிரோதமானது.  இதில் நீதிமன்றம் தலையிட முடியும்.  சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதால்,  உரிமை மீறல் பிரச்சனை எடுக்கப்பட்டுள்ளது. 

 

உரிமை மீறல் என முடிவெடுத்த சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல் சட்டமன்றத்திலேயே விவாதித்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில்  உரிமை மீறல் பிரச்சனையை எடுத்து,  உரிமைக் குழுவுக்கு அனுப்பியபோது,  தங்கள் தரப்புக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என வாதிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்