/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1052.jpg)
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள சி.வி. சண்முகம், கடந்த 7ஆம் தேதி மாவட்டக் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான கட்சி பொறுப்பாளர்களுடன் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன்பிறகு பத்திரிகை ஊடகத்தினரிடம் அரசியல் குறித்து பரபரப்பான பல்வேறு கருத்துக்களைத்தெரிவித்தார். அப்போது, “கருவாடு கூட மீன் ஆகலாம்,ஆனால் சசிகலா அதிமுகவில் எப்போதும் உறுப்பினராக முடியாது. சசிகலாவுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தத் தொடர்பும் சம்பந்தமும் இல்லை. கட்சியை சீர்குலைக்க தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குதொடுத்து தள்ளுபடியானது. அப்படிப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு உதவியாளராக அவரோடு இருந்தவர். அதைத் தவிர அவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை” என காரசாரமாக பேட்டி அளித்திருந்தார்.
அதன் பிறகு நேற்று (09.06.2021) திடீரென திண்டிவனம் ரோசணை காவல் நிலையத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ. சக்கரபாணியுடன் வந்த சி.வி. சண்முகம், இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “சசிகலா குறித்து கடந்த 7ஆம் தேதி பத்திரிகை ஊடகத்தினரிடத்தில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். சசிகலாவின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். சசிகலா குறித்து பேசியதற்காக ‘உன்னை குடும்பத்தோடு ஒழித்துக் கட்டிவிடுவோம்’ என்றும் ஆபாசமான அருவருப்பான வார்த்தைகளாலும் திட்டி மிரட்டல் விடுத்துவருகின்றனர்.
முழுக்க முழுக்க சசிகலா தூண்டுதலின் பேரில் இந்த மிரட்டல் விடுத்துவருகின்றனர். எனவே இதற்கு காரணமான சசிகலா மீதும், எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று சி.வி. சண்முகம் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சருக்கு சசிகலா தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி அரசியலில் இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)