Skip to main content

வேட்பாளரை மறந்துவிட்டு மோடி பெயரைச் சொல்லி வாக்கு கேளுங்கள்! - அமித்ஷா 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்துவருகிறது. எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், இரண்டு முறை கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரங்களில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி.

 

Amit

 

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் பா.ஜ.க. ஊழியர்களுக்கு பல முக்கிய வழிகாட்டுதல்களை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வழங்கிவருகிறார். நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா, ‘வேட்பாளர்களை மறந்துவிடுங்கள். மோடியின் பெயரைச் சொல்லியும், தாமரையைக் காட்டியும் வாக்கு சேகரியுங்கள். நாம் இங்கு தொகுதிகளில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்தாமல், வாக்குச்சாவடிகளில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். அதிகமான வாக்குச்சாவடிகளில் நாம் வெற்றி பெறும்போது, நம்மால் நிச்சயமாக தேர்தலில் மாபெரும் வெற்றி பெறமுடியும்’ என அறிவுறுத்தியுள்ளார்.

 

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் படி, கர்நாடக மாநிலத்தில் சுமார் 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான வாக்களர்களை பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வைப்பதே அமித்ஷாவின் நோக்கமாக உள்ளது.

 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்கு மூலக்காரணமாக இருந்தது வாக்குச்சாவடிகள் வாரியாக அதிக வாக்குகளைப் பெறுவதுதான். அதேபோல், சமீபத்தில் நடந்துமுடிந்த ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. ஒற்றை இலக்கங்களிலேயே வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்