Skip to main content

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி

Published on 26/01/2021 | Edited on 26/01/2021
ttttt

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கடந்த 60 தினங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் லட்சகணக்கான டிராக்ட்டா்களை கொண்டு மாபெரும் அணி வகுப்பு நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர்.

 


அணிவகுப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக டிராக்டா் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெறுவதாக அறிவித்தது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகா், திருவரம்பூா், அந்தநல்லூா், மணிகன்டம் ஒன்றிய விவசாய சங்கங்கள் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய "தொழிற் சங்கங்கள் சார்பாக நடைபெற்றது. 

 


போலீசார் டிராக்டர் கொண்டுவர அனுமதி மறுக்கவே இருசக்கர வாகனத்தில் குவிந்தனர். இதில் திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகில் இருந்து 500க்கு மேற்பட்டோர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜோசப் வில்சன், சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகி வெங்கடநாராயணன், ஹிந்து மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகி ஜான்சன், ஏஐசிசிடியூ நிர்வாகி மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் பாண்டியன், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளை சிவசூரியன் ஆகியோர் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டனர். 

 


ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து பேரணி செல்ல அனுமதி வழங்கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் அனுமதி மறுக்கவே போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களை மீறி பேரணி புறப்பட்டு சென்றது மாநகராட்சி  அலுவலகம், ஒத்தகடை, தலைமை தபால் நிலையம், வழியாக ரயில்வே ஜங்ஷன் அருகில் முடிவடைந்தது. பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.