Skip to main content

“எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவதற்கு இத்தேர்தல் ஒரு அச்சாரம்” -  ஆர்.பி. உதயகுமார்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

ex minister rp udhayarakumar talk about erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 8ம் தேதி காலை 42வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் வீதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் துணிகளை அயன் செய்து கொடுக்கும் கடைக்குச் சென்று துணிகளை அயன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

பின்னர்  உதயகுமார் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தேர்தலை ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம். இதனால் எங்கள் பிரச்சாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு. எடப்பாடி வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் இந்த திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

 

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மடிக்கணினி திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக சாக்கு போக்கு சொல்லி வருகிறார். முதல் தலைமுறையினர் அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர் . ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், அதிமுக வெற்றி பெறும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.