Skip to main content

“பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் சகுனி..” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

Ex Minister Jeyakumar addressed press and comment about ops and panruti ramachandran

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வரவுள்ளது. 

 

இந்நிலையில், இ.பி.எஸ். அணி சார்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (19ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஓ.பி.எஸ்., பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பேட்டியை விரக்தியின் உச்சமாகத்தான் நான் பார்க்கிறேன். ஓ.பி.எஸ். பிக்பாக்கெட் என்கிறார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கோயிலாக பார்க்கும் எம்.ஜி.ஆர். மாளிகையை (அதிமுக தலைமை அலுவலகம்) ஓ.பி.எஸ். தலைமையில் குண்டர்கள் வந்து சூறையாடியது தான் பிக்பாக்கெட். இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று அவர் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்து ஓ.பி.எஸ். அமைச்சர் பதவியை பிடுங்கிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பதவி வெறியில் என்னிடம் இருந்து நிதித்துறையை பிடுங்கினார். இதுவெல்லாம் தான் பிக்பாக்கெட்.

 

கட்சியின் நலனுக்காக அவர் எந்தக் காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா. ஆரம்ப காலத்தில், அவருக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் அவரின் தலைவர்கள், வி.கே. சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான்.

 

தன் உடல் நலம் பாராமல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜெயலலிதா அதிமுகவை அரியணையில் ஏற்றினார். பின் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் அது எவ்வளவு பெரிய மாபெரும் துரோகம். எடப்பாடி, சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதினார். ஆனால், எடப்பாடி அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என எண்ணி அவரை கட்சியில் சேர்த்தார். அப்போது அவர் (ஓ.பி.எஸ்.) ஜெயலலிதாவின் மரணத்தில் அந்தக் குடும்பத்தின் மீது சந்தேகம் இருக்கிறது விசாரணை கமிஷன் போடவேண்டும் என்றார். அதை ஏற்ற எடப்பாடி விசாரணை கமிஷன் அமைத்தார்.  

விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்ன அவருக்கு பல முறை கமிஷனிலிருந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடைசியில் தான் சென்றார். அப்போது கமிஷனில் ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்றார். இது எவ்வளவு பெரிய முரண்.

 

அதேபோல், 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில், 10 அல்லது 9 தொகுதிகளில் அதிமுக வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்கமுடியும். அந்தத் தேர்தலில் எதிர் கட்சி பணமெல்லாம் செலவழித்தாலும், அதையெல்லாம் மீறி நாங்கள் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தோம். அந்த 22ல் பெரியகுளமும், ஆண்டிபட்டியும் அடக்கம். அதில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா.  நாடாளுமன்றத்துடன் சேர்ந்து நடைபெற்ற அந்த இடைத் தேர்தலில் தன் மகன் மட்டும் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து அவரது மகனை வெற்றி பெறவைத்து, இடைத் தேர்தல் நடந்த இரண்டு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்கிறார். அதன்பிறகு வந்த பொதுத் தேர்தலில் அவரின் மாவட்டத்தில் அவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். மற்றவர்களை வெற்றி பெறவைத்தாரா. அவரை பொறுத்தவரையில் கட்சி எப்படி போனாலும், அவருக்கு எடப்பாடி முதல்வராக வரக்கூடாது என எண்ணம். 

 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல், பண்ருட்டியார் போன எந்தக் கட்சியாவது உருப்பட்டிருக்கிறதா. அவர் ஓ.பி.எஸ்.ஸிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு கை கூலியாக, எடப்பாடியையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். வயதானவர் பேச்சில் ஒரு அளவு வேண்டாமா. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. மகாபாரதத்தில் எப்படி சகுனியோ அதுபோல், அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரனை சகுனி என சொல்லலாம். எடப்பாடியின் எழுச்சியை ஓ.பி.எஸ்.ஆல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.