Skip to main content

"இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்" - செங்கோட்டையன்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

erode east by election former minister sengottaiyan talks about admk symbol 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

 

ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டுள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

 

நாளை மறுதினம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.