Skip to main content

“மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்” - இ.பி.எஸ். பேட்டி!

Published on 26/03/2025 | Edited on 26/03/2025

 

EPS says anti people DMK regime must be removed

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (25.03.2025) டெல்லி சென்றிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை, சி.வி. சண்முகம்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த 2023இல் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. அப்போது, இனி எப்போதும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறினர். இருப்பினும் பாஜகவோடு அதிமுக கூட்டணி சேரும் என்று தகவல் பரவி வந்த வண்ணம் இருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் வருகிறபோது தான் கூட்டணிக்கான கட்சிகள் குறித்து, ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் பேசி  முடிவு செய்யப்படும். இப்போதே கூட்டணி இருக்கிறதா?, இல்லையா என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.

அதிமுகவை பொறுத்தவரையில், கூட்டணி அமைக்கும் போது அனைத்து செய்தியாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து அது குறித்துத் தெரிவிக்கப்படும். அதைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். அதிமுகவை பொறுத்த வரைக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும். அது தான் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத திமுக ஆட்சியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்