/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-art-1_7.jpg)
மத்திய அரசின் நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு, கடந்த மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32 ஆயிரத்து 500 பேருக்குச் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தைக் கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள். தனியார் நடத்திய கார் பந்தயத்திற்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்குச் சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks-modi-art-new-1_0.jpg)
எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த 27ஆம் தேதி (27.09.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘மத்திய அரசு 60 விழுக்காடு நிதியையும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு நிதியையும் அளித்துச் செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ், இந்த நிதியாண்டில் மத்திய அரசு வழங்க வேண்டியது 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய். இந்தத் தொகையில், முதல் தவணை இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் கையெழுத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்திருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது. காலை உணவுத் திட்டம் போல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால், தேசியக் கல்விக் குழுவின் ஒரு விதிமுறையான மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழித் திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்படவேண்டும் என்று மத்திய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்தச் சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத காரணம் காட்டி, மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி அளிக்கப்படவேண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம்’ எனப் பிரதமரிடம் தெரிவித்தாக கூறியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)