Skip to main content

‘என்னை ஒரு கருவியாகக் கொண்டு அரசியல் களத்தில் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள்’ - திருமாவளவன் எம்.பி.!

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
Enemies are trying to move the stake in the political field by using me as a tool Thirumavalavan MP

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (06.12.2024) மாலை சென்னையில் நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பிரபல பதிப்பகம்  வெளியிடும் நூல். ஆதவ் அர்ஜூன் அவர்களின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இது புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று (திசம்பர் -06) சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.

இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது. அந்நிகழ்வில் ஆங்கில நாளிதழின் ஆசிரியர் இராம், மும்பையிலிருந்து  ஆனந்த்டெல்டும்டேவும் பங்கேற்க விருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு  திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதல்வர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; ராகுல்காந்தியை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியு ம்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன்பின்னர், நடிகர் விஜய் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும்.

நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது  ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. விஜய்யின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது, ‘டிசம்பர்-06,  விஜய் - திருமா ஒரே மேடையில்’ என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின. ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது?

அதாவது, பிரபல பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?. அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?. கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன?. என்னைப் பற்றியும் விசிக பற்றியும் எதிர்மறையாக மட்டுமே செய்திகள் வெளியிடுவதைத் தனது தார்மீகக் கடமையாகக் கருதி தொடர்ந்து செயல்பட்டுவரும் அந்த நாளேட்டுக்குத் திடீரென என்மீது  நல்லெண்ணக் கரிசனம் எங்கிருந்து வந்தது?.

Enemies are trying to move the stake in the political field by using me as a tool Thirumavalavan MP

அந்த நாளேட்டின் அத்தகைய செயற்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல தெற்றெனத் தெரிகிறது. அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்? இவ்வினா எழுவது இயல்பேயாகும். திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு' என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய் அவர்களோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் " -என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்; அதனடிப்படையில் என்மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது வெள்ளிடை மலையென  வெளிப்படுகிறது. அந்த நாளேட்டுக்கு அப்படியொரு உள்நோக்கம் இல்லையெனில், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?. மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா?. இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப்  பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை?. அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர்,  'அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ' என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது,‘அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென’   பதிப்பகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. 'வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக' இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர்.

அந்த நாளேட்டின் உள்நோக்கம் பற்றி அலச விரும்பாமல் மிக இயல்பாக அதனைக் கடந்து போகிறவர்கள், விகடன் எடுத்த முடிவு பற்றியும் பேசாமல் மவுனித்திருப்பது ஏன்?. அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும்  ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார். ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும்  கொண்டு செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும் அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது. யார் என்ன சொன்னாலும் அதனைப் பொருட்படுத்தாமல் விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா?. அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா? திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய் அவர்களோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா? அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா?.

வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா?. திமுக அவரை அச்சுறுத்துகிறதா?. அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா?. திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது?. இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இவர்களில் யாரும், பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை. விஜய் போதும்; திருமா தேவையில்லை’ என்கிற முடிவை பதிப்பகத்தால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? என்று எவரும் அலசவில்லை. விஜய் வருத்தப்பட்டு விடக்கூடாது;  திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என எப்படி அவர்களால் இலகுவாக நகர முடிந்தது? - என்று கேள்வி எழுப்பவும் இங்கே எவருக்கும் துணிச்சல் இல்லை. இதனை ஒரு வாதத்திற்காகத் தான் நான் முன் வைக்கிறேன். பதிப்பகத்தார் இப்படி முடிவெடுப்பதற்கு நானும் தான் காரணம். விஜய்  வேண்டாம் அவரைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஒருபோதும் கூறமாட்டேன்; உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்கமாட்டேன். அவரை வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள் என்று பதிப்பகத்தாரிடம் அந்த நாளேட்டுச் செய்தியைக் கண்டதுமே நான் கூறிவிட்டேன். என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?.

நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும். எனவே, விஜய் அவர்களைக் கொண்டே அவர்கள் விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ஒருவேளை நான் அப்படி கூறாவிட்டாலும் கூட அவர்களால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும். இது தான் இன்றைய சமூக - அரசியலின் இயல்நிலை போக்காகும். 'விஜய் அவர்களைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்' என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும்.

இந்நிலையில், நான் அவ்வாறு கூறியதன் அடிப்படையில் தான், அவர்களால் அந்த முடிவை குற்ற உணர்வின்றி எடுக்க முடிந்தது என்றும் நான் நம்புகிறேன். அடுத்து, "விஜய் இந்நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்ட பின்னர், அதாவது, திசம்பர் 06 க்குப் பிறகு இதே நூலை வேறொரு நாளில், வேறொரு இடத்தில் 'அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை' ஒருங்கிணையுங்கள்; அதில் நான் பங்கேற்கிறேன்"- என்கிற கருத்தையும் பதிப்பகத்திற்கு முன் வைத்தேன். அதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்போதே என்னால் உணரமுடிந்தது. இந்நிலையில், நமக்கு எதிராக ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் மனம்போன போக்கில் வாரி வாரி வீசுபவர்கள் எப்படி நம் பக்கம் நின்று  சிந்திப்பார்கள்? விஜய்யை மிகப்பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு "துக்கடா" வாகவும் எடைபோடுகிறவர்களால் எவ்வாறு நமக்காக வாதிட முடியும்?. "தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்" என திருமாவளவன் பெருந்தன்மையோடு  ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு?. "அவருக்கு நெருக்கடி வேண்டாம்; அவரைத் தவிர்க்கவும் வேண்டாம்; அவரை வைத்தே நிகழ்வை நடத்துங்கள் - என்று விஜய் கூட பதிப்பகத்துக்குச் சொல்லியிருக்கலாமே எனப் பேசுகிற துணிச்சல் இங்கே யாருக்குண்டு?. அல்லது " திருமாவை மட்டும் வைத்து நடத்துகிறோம் என விகடனே விஜய் அவர்களிடம் சொல்லியிருந்தால்,  அவர் என்ன மறுதலிக்கவா போகிறார்?  நான் தான் வெளியிடுவேன் என அடம் பிடிக்கவா போகிறார்? அதனை பதிப்பகம் செய்யாதது ஏன்?” என்று வாதிடுகிற நேர்மைத் திறம் இங்கே எவருக்குண்டு?.

மாறாக, முகம் சுளிக்கும் மொழியில், மூக்கைப் பிடிக்கும் நடையில், நரகல் சொற்களை நாவால் அள்ளி நம்மீதே வீசுகின்றனர். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்’ என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம், ‘திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார்’ என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?. அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?.

ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள். ‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; அவர் சுதந்திரமாகவும் துணிவாகவும் முடிவெடுக்க கூடியவர்’ என்றெல்லாம்  யாரும் இங்கே நமக்காக வாதாடவும் மாட்டார்கள். மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப்  பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய்யோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுகவோடு இணைவார் என்றும் தான், அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள். இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு. அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டானே என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும் அமில வசவுகள். அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்