
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் புகழேந்தி தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 7ஆம் தேதி (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு அளித்தனர். அதில், “கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். அதோடு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்குத் தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் ஆணையத்தில் 23.12.2024 அன்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இந்த நோட்டிஸை ஏற்று 23.12.2024 அன்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரர் அதிமுக உறுப்பினர் இல்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரும், அதிமுக பொதுச் செயலாளரை எதிர்த்துப் போட்டியிட்ட நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்ற போர்வையில் கொடுக்கப்பட்டுள்ள மனு தவறானது எனத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரத்தை மீறி இல்லாத அதிகாரத்தை இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதனை எதிர்த்துத் தான் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை.
தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயல்பாட்டில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 29 ஏவில் உள்ள 1 முதல் 8 வரை உள்ள உட்பிரிவின் படி ஒரு கட்சியின் சட்டத் திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். 29 ஏ பிரிவு 9இன் உட்பிரிவின் படி கட்சியின் அமைப்பு மாற்றங்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். அதனைப் பதிவு செய்வது மட்டும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ள அதிகாரம் ஆகும். அதன்படி தேர்தல் ஆணையம் வெறும் குமாஸ்தா வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்” எனப் பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.