Skip to main content

“10 வருட ஆட்சியில் பாஜகவினர் எதையுமே செய்யவில்லை” - துரை வைகோ தீவிர பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Durai Vaiko is actively campaigning in Trichy

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்டோர் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில்  சாமி தரிசனம் செய்தனர். பின்னர், திருநெடுங்குளத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துறை வைகோவுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டி பேசினர். அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிலிண்டர் விலையை ரூ.500 ஆக குறைப்போம் என்றும் பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் விலையை 65 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் சிந்தித்து வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றனர்.

Durai Vaiko is actively campaigning in Trichy

மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், “திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளது. மகளிர் உரிமை தொகை 1.15 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் 1.60 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.400க்கு விற்கப்பட்ட கேஸ் தற்போது ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்துள்ளார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 வருட ஆட்சியில் பாஜகவினர் எதையுமே செய்யவில்லை. ஆகவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் 100 சதவீதம் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் அதற்காக தனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

பிரசாரத்தின்போது திருச்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர் ரவிக்குமார், சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் அலெக்ஸ், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும்,  இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

தொடர்ந்து கூத்தைப்பார் தேவராயனேரி, திருச்சி மலைக்கோட்டை பகுதி என்.எஸ்.பி.ரோடு தெப்பக்குளம், ஜீவா நகர், நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதிகளில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் செய்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சார்ந்த செய்திகள்