Skip to main content

“ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாஸ் கூறுகிறார்..” - கி. வெங்கட்ராமன் கண்டனம்

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

"Dr. Ramadass says in his own words the opinion of the Aryan RSS." Venkatraman condemned

 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! 

 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக இருந்துவந்தது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக் கோரிக்கையாகவும் அது அப்போது இருந்தது. இதற்கு முன்னோட்டமாகத்தான், சென்னை மாகாணமாக இருந்த காலத்திலேயே 1920களில் காங்கிரஸ் கமிட்டி, மொழிவழி தேசிய இன அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று சீரமைக்கப்பட்டது. 

 

‘மாநிலம்’ என்பது வெறும் நிர்வாக அலகு (Administrative Unit) அல்ல – ஆட்சிப் பகுதி (Teritory) அல்ல என்பதை அப்போதே காந்தியடிகள் தெளிவுபடுத்தினார். மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்படும் என்று இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே காங்கிரஸ் தலைமை உறுதி கூறியது. ஆயினும், சுதந்திரத்திற்குப் பின்னால் அந்த வாக்குறுதியை மீறியதால், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு தேசிய இனப் பகுதிகளில் கடும் போராட்டங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாக மாநிலச் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. 

 

இந்த மாநில சீரமைப்புக் குழு, மாநிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கோட்பாடு வளப் பகிர்வா, வளர்ச்சிப் பகிர்வா, மொழிவழி தேசிய இனத் தாயக ஏற்பா என்பது குறித்தெல்லாம் விவாதித்து, மொழிவழி தேசிய இனத் தாயகம் என்பதுதான் மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதனடிப்படையில் மாநிலங்களை உருவாக்கப் பரிந்துரைத்தது. அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று மொழிவழி தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது; பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன. 

 

அன்றைக்கே கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் ‘ஜன்பத்’ என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது. ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாஸ் கூறுகிறார். 

 

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக ஏற்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டை மூன்றாகக் கூறுபோடலாம் என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவாக மருத்துவர் இராமதாஸ் முன்வைப்பதெல்லாம் இவ்வாறான மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் இனக்குழு மக்களின் கோரிக்கைகள்தான்! 

 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற கோரிக்கைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். அவத்தி மொழி, அந்த மொழி பயிலும் மக்களின் தாயகம் ஆகியவை தனித்தன்மையானவை. அந்த அவத்தி மொழியை இந்தி மொழி என்று கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் சற்றொப்ப நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் ‘ஆவத்பிரதேசம்’ எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரினர். இன்றும் கோரி வருகின்றனர். இந்தி மொழி இராமாயணம் என்று சொல்லப்படும் துளசிதாசர் இராமாயணமே அவத்தி மொழியில் எழுதப்பட்டதாகும். அது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால், அதை இந்தி என்று சொல்லி விழுங்கிவிட்டார்கள் என்பது அம்மக்களின் ஆவேசக் குரலாக இருக்கிறது. 

 

அதேபோல், புந்தல்காண்ட் என்பது உத்திரப்பிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் ஏழு மாவட்டங்கள் அடங்கிய தனித்த இனக்குழு மக்களின் தாயகமாகும். மாநில சீரமைப்பு நடந்த காலத்திலேயே புந்தல்காண்ட் தனி மாநிலமாக உருவாக்குவது பற்றி பரிவோடு பரிசீலிக்கலாம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களே கூறியிருக்கிறார். 

 

அதேபோல், பீகாரில் மைதிலி மொழி பேசக்கூடிய சற்றொப்ப 3 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்களுக்கு மிதிலை மாநிலம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். போஜ்புரி மொழி பேசும் சற்றொப்ப 5 கோடி மக்கள், தங்கள் மொழிக்கு அங்கீகாரத்தையும், தங்கள் தேசிய இனத்திற்குரிய போஜ்புரி மாநிலத்தையும் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போஜ்புரி மொழிக்கு சாகித்திய அகாதெமியில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவர்களுடைய தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த சிறிய வெற்றியாகும்! 

 

மருத்துவர் இராமதாஸ் கூறும் போடோலோந்து கோரிக்கையும் இவ்வாறு இனத்தாயகம் சார்ந்த கோரிக்கையாகும். போடோலாந்து மக்கள் தனிநாடு கோரி போராடி, அது கிடைக்கவில்லை என்ற நிலையில், அசாமிலிருந்து தனி போடோலாந்து மாநிலம் வேண்டுமென்று போராடுகிறார்கள். 

 

ஏற்கெனவே மருத்துவர் இராமதாஸ் கூறும் சார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு – வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும். 

 

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள் – இனக்குழுக்கள் தாயகம் படைப்பதற்குத்தான் எடுத்துக்காட்டுகளே தவிர, தாயகத்தைக் கூறுபோடுவதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல! 

 

அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் கூறுபோட்டுத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாறு அற்றவர்களாக – தாயகம் அற்றவர்களாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள். 

 

மதத்தைக் காட்டி காஷ்மீரிகளின் வரலாற்றுத் தாயகமான ஜம்மு காஷ்மீரை இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது. மருத்துவர் இராமதாஸ், சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு வழி ஏற்படுத்த முயல்கிறார். இதற்கு நிர்வாகச் சீரமைப்பு, வளர்ச்சிப் பங்கீடு என்று பட்டாடைப் போர்த்தப் பார்க்கிறார். 

 

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரைதான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அது இல்லையென்றால், பா.ஜ.க.வின் ஒற்றை இந்தியா என்ற டாங்கிகளின் பல் சக்கரத்தில் சிக்கி தமிழ்நாடு அழிந்து போகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! 

 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற மருத்துவர் இராமதாஸின் தமிழினப் பகைக் கருத்துக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? - ராமதாஸ் கண்டனம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
 Ramadoss said Depriving tribal students of educational opportunities is social justice?

பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 300&க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 400&க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அந்தப் பள்ளிகளில் ஏற்கனவே தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 300 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது. தொலைநோக்குப் பார்வையில்லாத நடவடிக்கைகளின் மூலம் பழங்குடியின மாணவர்களின் கல்வி வாய்ப்பை அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அங்கமாக இருந்த பழங்குடியினர் நலத் துறை 2000&ஆம் ஆண்டில் தனித்துறையாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், கூட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பழங்குடியினர் நலத்துறை, 01.04.2018&ஆம் நாள் முதல் தான் தனித்த அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 தொடக்கப்பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

இந்தப் பள்ளிகளில் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகளில்  210 இடைநிலை ஆசிரியர்கள், 179 பட்டதாரி ஆசிரியர்கள், 49 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்  பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. அதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றி வந்த 300 தற்காலிக ஆசிரியர்களும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றி பள்ளிகளின் கல்வித்தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வந்தனர். இத்தகைய சூழலில் அவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டதற்காக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தகுதித்தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, அவர்கள் பிற வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறித் தான் ஏற்கனவே இருந்த தற்காலிக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஒருவேளை தகுதி பெற்ற ஆசிரியர்களைத் தான் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் கூட, அதற்காக பின்பற்றப்பட்ட அணுகுமுறை தவறு.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன்பாக நிரந்தர ஆசிரியர்களையோ, மாற்று தற்காலிக ஆசிரியர்களையோ நியமிக்க பழங்குடியினர் நலத்துறை  நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புதிய ஆசிரியர்களையும் நியமிக்க முடியவில்லை. அதனால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பிற பள்ளிகளைப் போல நகரத்துக்கு மத்தியில் அமைந்திருப்பதில்லை. எளிதில் அணுகமுடியாத தொலைதூரப் பகுதிகளில் தான் அவை அமைந்துள்ளன. தற்காலிக ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தரப்படுவதால் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற எவரும் தொலைதூரங்களில் உள்ள பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றத் தயாராக இல்லை. அதனால், பழங்குடியின பள்ளிகளின் மாணவர்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலைக்கு காரணமான பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், தமது தவறைத் திருத்திக் கொள்வதற்கு பதிலாக, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததையும், தற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையும் ஊடக நேர்காணல் மூலம் சுட்டிக்காட்டியதற்காக  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

சமூகப் படிநிலையின் அடித்தட்டில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை விட மோசமான சமூக அநீதி எதுவும் கிடையாது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காத அரசு, அதை சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு குறிப்பாணை வழங்கி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதுவா திமுக அரசின் சமூகநீதி?

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் 300 பேரும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணையை  அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்?” - ராமதாஸ்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
 Ramadoss said Why is the government afraid to take action against the Vice-Chancellor of Periyar University?

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன் என பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், அவை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளை செயல்படுத்த வலியுறுத்தியும் பல்கலைக்கழக வளாகத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய  பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் 77 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கேட்டு அவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி குறிப்பாணை அனுப்பியுள்ளார். பல்கலைக்கழகத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்  வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அப்படிப்பட்டவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக இருந்த முனைவர் தங்கவேலு மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு குழு, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு வசதியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், இதை மதிக்காமல் தங்கவேலுவை ஓய்வு பெற அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்க ஆணையிட்டது. இவற்றைக் கண்டித்து தான் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று தான்.

ஆனால், தமக்கு எதிராகவும், தமது நிர்வாகத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் வாயிலாக  போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை  எடுத்திருப்பது அப்பட்டமான அடக்குமுறை ஆகும். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளால், 18 வகையான முதுநிலை படிப்புகளுக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெறும் 2 பேர் மட்டுமே வரும் அளவு பல்கலைக்கழகத்தின் பெயர் சீர் கெட்டுள்ளது. இதை சரி செய்ய முடியாத துணைவேந்தர் தமக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறையை  கட்டவிழ்த்து விட்டிருப்பதை மன்னிக்க முடியாது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது தான், துணைவேந்தரின்  துணிச்சலுக்கும், அடக்குமுறைக்கும் காரணம் ஆகும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், தண்டனை பெற்றுத்தரவும் தமிழக அரசு அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை. தமிழக அரசு இனியாவது அதன் தயக்கத்தை உடைத்து, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் 77 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

The website encountered an unexpected error. Please try again later.