சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர், 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோற்றதால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் ஜெகதீஸ்வரன் இறந்த சோகத்தில், அவரின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டேன் என மாணவர்களின் பெற்றோருக்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீட் தேர்வைப் பொறுத்தவரை இதற்கான பல்வேறு விளக்கங்கள், விவாதங்கள், பல்வேறு சட்டங்கள், அதன் பின்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நீட் தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கொடுக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள நீட்டில் மீண்டும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் தனியாக அதில் விலக்கு அளிக்க முடியுமா? இது ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கல். இரண்டாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது திமுக. எங்களுக்கு அந்த ரகசியம் தெரியும் என்று சொன்னவர் இன்றைய விளையாட்டுத் துறை அமைச்சர். இன்று தாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருட காலமானதற்கு பின்பும், இன்னும் அந்த அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் இன்னொரு அரசியல் மாற்றம் மத்தியில் நடக்கும் என்று கூறினால் கனவு காண்கிறார் என்று அர்த்தம். ஒருபோதும் மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்படாது. மீண்டும் பாஜக தலைமையிலான அரசு தான் அமையப்போகிறது. எனவே, ஏற்கனவே தமிழக மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏமாற்றியது போல, இன்னும் ஒரு ஏமாற்று வாக்குறுதிக்கு அவர் தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு குழந்தையும் தற்கொலை செய்ய வேண்டும் அல்லது பெற்றோர்களுடைய உயிர்களைப் பறிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நீட் தேர்வில் இடம் கிடைக்காவிட்டால் நீங்கள் உயிரிழக்கலாம்; அதற்கு பின்பாக நீங்கள் க்ளோரிஃபை செய்யப்படுவீர்கள்; உங்கள் குடும்பத்திற்கு உதவி கிடைக்கும் என ஒரு தவறான முன்னுதாரணம் இருக்கிறது. அந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தியது திமுக தான். அன்று பெரம்பலூரில் ஒரு மாணவி இறந்ததை மிகப்பெரிய அரசியல் ஆக்கி குளிர் காய்ந்த திமுக, இன்று ஆட்சியதிகாரம் இவர்களிடம் இருக்கும்போதும் ஏன் இப்படி தற்கொலைகள் நடைபெறுகிறது. இதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.