வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

Advertisment

அப்பொழுது ஓபிஎஸ் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்த எடப்பாடி பழனிசாமி, ''ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கமும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்'' எனத் தெரிவித்திருந்தார்.

dmk

Advertisment

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ''இது அவர்களுக்குள் இருக்கும் சண்டை. இதற்கும் திமுகவிற்கும்எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே எடப்பாடி பழனிசாமி கோபப்பட வேண்டியது யார் மீதோ. வருமானவரித்துறை சோதனையெல்லாம் நடத்தப்படுகிறது. வருமான வரித்துறை என்ன எங்கள் கையிலா இருக்கிறது. வருமான வரித்துறை மத்திய அரசின் கையில் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் தாக்கி பேசுவது எடப்பாடிக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் எப்படி இந்த பொதுக்குழுவை நடத்தினார் என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரியும்.

எம்ஜிஆர் காலத்திலோ. ஜெயலலிதா காலத்திலோ பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்களா? சென்னையில் இந்த ஐந்தாறு 5 ஸ்டார் ஓட்டல்களில் நாட்களாக இடமே இல்லை. ஆனால் அதைப்பற்றி நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அது அவரது சாமர்த்தியம். ஆனால் மீண்டும் திமுகவை வம்பிற்கும் இழுக்கக்கூடாது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக பல விபத்துகளைச் சந்தித்து வருகிறது. இதுகூட நிலையான பிரிவு இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சேர்ந்துவிடுவார்கள். சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு ஒருவாரத்தில் சசிகலாவை மறந்தவர்கள். எனவே இதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது' என்றார்.