தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது தி.மு.க. அதேபோல, தி.மு.க.வில் உள்ள மாவட்டங்கள் பலவற்றையும், நிர்வாக வசதிக்காகப் பிரித்து, புதிய மாவட்டச் செயலாளர்கள் அதிக அளவில் உருவாக்கபட்டு வருகிறார்கள். இதன் மூலம் தேர்தல் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இவைகளைக் கண்காணிப்பதற்காக, மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இவைகள் அனைத்தையும் நிர்வாகிக்கும் முதன்மை அதிகாரம் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளருக்கு உண்டு. அந்த பதவியில், ஆர்.எஸ்.பாரதி இருக்கிறார். ஆர் எஸ்.பாரதியின் வயது முதிர்வு காரணமாக, மொத்தப் பணிகளையும் கவனிப்பதில் சிரமங்கள் இருப்பதாக தி.மு.க தலைமை கருதுகிறது.
அதனால், அமைப்புச் செயலாளர் பதவியை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.பாரதியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், உருவாக்கப்படும் புதிய அமைப்புச் செயலாளர் பதவியில், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் விசுவாசியான சட்டப்படிப்பில் புலமைப் பெற்ற ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார் என்கிறது தி.மு.க வட்டாரம்.